இளம்பெண் தற்கொலை இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
தஞ்சாவூர்:போலீஸ் ஸ்டேஷன் முன் இளம்பெண் விஷம் குடித்து இறந்த விவகாரத்தில், நடுக்காவேரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரியை சேர்ந்தவர் தினேஷ், 32. இவர் மீது 13 வழக்குகள் உள்ளன. கடந்த, 8ம் தேதி, பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாக, நடுக்காவேரி போலீசார் தினேஷை கைது செய்தனர். அவர் மீது பொய் வழக்கு போடுவதாகக் கூறி, தினேஷின் தங்கையர் மேனகா, 31, கீர்த்திகா, 29, போலீஸ் ஸ்டேஷன் முன் காத்திருந்தனர். அப்போது, போலீசார் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதால், ஸ்டேஷன் முன் இருவரும் விஷம் குடித்தனர்.அவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று முன்தினம் காலை உயிர் இழந்தார். மேனகா சிகிச்சை பெறுகிறார்.இந்நிலையில், கீர்த்தி காவின் உறவினர்கள், இச்சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கீர்த்திகா உடலை பெற மறுத்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தை முறையாக கையாளாமல் விட்டதால், இன்ஸ்பெக்டர் சர்மிளா நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், கீர்த்திகா உடலை பெற மறுத்து, உறவினர்கள் நடுக்காவேரியில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.