உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஆடுதுறை சேர்மன் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவர் தற்கொலை

ஆடுதுறை சேர்மன் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவர் தற்கொலை

தஞ்சாவூர்:ஆடுதுறை சேர்மன் கொலை முயற்சி விவகாரத்தில், போலீசாரால் தேடப்பட்டவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி, பா.ம.க.,வைச் சேர்ந்த சேர்மன் ஸ்டாலின், அலுவலகத்தில் இருந்த போது, செப்., 5ம் தேதி, மர்ம நபர்கள், நாட்டு வெடிகுண்டு வீசி அவரை கொல்ல முயன்றனர். அந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக, கும்பகோணத்தை சேர்ந்த சிலரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், போலீசாரிடம் சரணடைந்த மருதுபாண்டியன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், கும்பகோணம் அருகே உடையாளூரை சேர்ந்த லட்சுமணன், 35, என்பவர் தான், நாட்டு வெடி குண்டுகளை தயாரித்து கொடுத்ததாக, தகவல் தெரிவித்தார். அதன்படி, கடந்த, 7ம் தேதி, திருவிடைமருதுார் போலீசார், லட்சுமணனிடம் விசாரிப்பதற்காக, அவரது வீட்டிற்கு சென்ற போது, அவர் தலைமறைவானார். லட்சுமணன் அண்ணன் ராமன், 37, லட்சுமணன் மனைவி மதனா, 28, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு, லட்சுமணன் வீட்டிற்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து, அங்கு சென்ற போது, துப்பட்டாவில் துாக்கிட்டு, அவர் இறந்து கிடந்தார். இது குறித்து, பட்டீஸ்வரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேர்மன் ஸ்டாலின் நேற்று கூறியதாவது: என்னை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில், லட்சுமணனை போலீசார் விசாரிக்க சென்றுள்ளனர். ஆனால், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுவது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. போலீசாரின் கவனத்தை திசை திருப்ப, அந்த கும்பல் லட்சுமணனை அடித்து, துன்புறுத்தி, கொலை செய்திருக்கலாம், என தோன்றுகிறது. போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை