மகளின் திருமணத்தன்று சோகம் விபத்தில் தாய் பலி; தந்தை சீரியஸ்
தஞ்சாவூர்:மகளின் திருமணம் நடந்த அன்று பெற்றோர் விபத்தில் சிக்கி, தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே வெட்டிக்காடு அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி, 55, இவரது மனைவி மாலதி, 50. இந்த தம்பதியின், மகள் சுசித்ராவுக்கு சதீஷ்குமார் என்பவருடன் நேற்று ஊரணிபுரத்தில் திருமணம் நடந்தது.ரெங்கசாமி- - மாலதி தம்பதி, வீட்டில் இருந்து, பொருட்களை எடுத்து, டூ - வீலரில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு சென்றனர். கலியராயன் விடுதி பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்த போது, ரெங்கசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.இதனால், நிலை தடுமாறி, சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தார். டூ - வீலரில் இருந்து துாக்கி வீசப்பட்ட மாலதி, தடுப்பு சுவரில் தலை மோதி இறந்தார்.சம்பவ இடத்திற்கு வந்த திருவோணம் போலீசார், மாலதி உடலை மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். படுகாயமடைந்த ரெங்கசாமி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, சுசித்ராவுக்கு தகவல் தெரிவிக்காமல், திருமணத்தை நடத்திய உறவினர்கள், தாய் இறந்த செய்தியை பிறகு தெரிவித்தனர்.