ரூ.300 கோடி முறைகேடு பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு
தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சியில், 300 கோடி ரூபாய் பணிகளுக்கு வெள்ளை அறிக்கை கேட்டு, பிரசாரம் செய்ய முயன்ற ஹிந்து மக்கள் கட்சியினருக்கு, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளாக, 300 கோடி ரூபாயில் 1,780 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க.,வினர், துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.ஆனால், மாநகராட்சி வார்டுகளில் சாலைகள், பாதாளசாக்கடை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஹிந்து மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டி, பிரசார இயக்கம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.இதுகுறித்து மாநில பொதுச் செயலர் குருமூர்த்தி கூறியதாவது:கும்பகோணம் மாநகராட்சியில், தரமற்ற முறையில் பணிகள் செய்து, மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி வருகின்றனர்.இதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, பிரசார நடைபயணம் நடத்துவோம். அதுவரை, மாநகராட்சி வார்டுகளில் நிலவும் அவலங்களை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.