இட தகராறில் வாலிபர் கொலை
தஞ்சாவூர்; தஞ்சாவூரில் இட தகராறில் வாலிபரை கொலை செய்த தந்தை, மகன்களை போலீசார் தேடுகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லுார் அருகே வேட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 30. அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகர், 50. இவர்களின் வீட்டுக்கு பின்னால், பொது இடத்தில் கழிப்பறை கட்டுவதில் பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, வெற்றிவேலுக்கும், அழகர் குடும்பத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி நடந்துள்ளது. அப்போது, அழகர், அவரது மகன்கள் விக்னேஷ், 27, சந்துரு, 26, ஆகியோர் சேர்ந்து, கடப்பாரையால் வெற்றிவேலை தாக்கினர்; தடுக்கச் சென்ற வெற்றிவேலின் மைத்துனர் சுரேஷ் மீதும் தாக்குதல் நடத்தினர். படுகாயமடைந்த வெற்றிவேல், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.காயமடைந்த சுரேஷ், தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பந்தநல்லுார் போலீசார், அழகர், விக்னேஷ், சந்துருவை தேடி வருகின்றனர்.