| ADDED : ஆக 11, 2024 05:00 AM
பெரியகுளம் : மாவட்டத்தில் மா மகசூல் 90 சதவீத பாதித்தால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு முதல் போடி முந்தல் வரை 27 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் உள்ளது. பெரியகுளம், போடி, கம்பம் தாலுகாக்களில் மா சாகுபடி அதிகம் நடக்கிறது. மா சாகுபடி வறட்சியை தாங்கி வளரக்கூடியது என்தாலும் அதிகளவில் உரம், பூச்சி மருந்துகள் செலவு இருக்காது. அதேசமயம் குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரியில், பூ பூக்கும், பிஞ்சாகி, காயாகி, மார்ச், ஏப்ரலில் அறுவடை துவங்கி ஜூன் வரை இருக்கும். இப் பகுதிகளில் காசா, காளைபாடி, கல்லாமை, செந்தூரம், அல்போன்சா கிரேப்ஸ், இமாம்பசந்த், மல்கோவா உட்பட பல்வேறு ரகங்கள் உள்ளது. இந்தப்பகுதி மண்ணின் தன்மைக்கேற்ப மாம்பழம் சுவையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவ நிலை மாற்றத்தால் மகசூல் கடுமையாக பாதித்தது. விவசாயிகள் பலத்த நஷ்டமடைந்தனர்.மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன்: பருவநிலை மாற்றத்தால் 3 ஆண்டுகளாக மா விவசாயம் பாதித்துள்ளது. மா மரங்களில் அடியுரம் முதல் மருந்து தெளிப்பு வரை நிர்வாக செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவாகிறது. இந்தாண்டு 90 சதவீதம் விளைச்சல் இல்லாமல் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மா விவசாயிகள் கடன் சுமையால் அவதிப்படுகின்றனர். கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையின் பேரில், தோட்டக்கலைத் துறை மற்றும் தோட்டக்கலை கல்லூரி பூச்சியல்துறையினர் மா தோட்டங்களை ஆய்வு செய்தனர். பாதிப்பு குறித்த விபரங்களை கணக்கெடுத்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் நிவாரணம் விரைவில் வழங்க வேண்டும் என என்றார்.