உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் பத்து மாதங்களில் 12.85 டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி பேட்டி

மாவட்டத்தில் பத்து மாதங்களில் 12.85 டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி பேட்டி

தேனி: 'தமிழக அளவில் தேனி மாவட்டம் பட்டுக்கூடு உற்பத்தியில் 2ம் இடம் வகிக்கிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும் பட்டு விவசாயிகள் ரூ.5.50 கோடி மதிப்பிலான 12.85 டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்துள்ளனர்.' என, மாவட்ட பட்டுவளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் கணபதி தெரிவித்தார்.தேசிய அளவில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முக்கியமானதாகும். மாவட்டத்தில் மல்பெரி சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பட்டுக்கூடு உற்பத்தியை அதிகரிக்கவும் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பட்டுவளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் பற்றி உதவி இயக்குனர் கணபதி, தினமலர் நாளிதழின் 'அன்புடன் அதிகாரி' பகுதிக்காக அளித்த பேட்டி.

மாவட்டத்தில் மல்பெரி சாகுபடி பரப்பு

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, சின்னமனுார், தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 815 விவசாயிகள் 1523 ஏக்கர் பரப்பில் எம்.ஆர்.2, வீ 1 ரக மல்பெரி ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த ரகங்கள் கோடை காலத்திலும் நன்கு வளரும் திறன் கொண்டவை. மாவட்டத்தில் வெண்மை நிற பட்டுக்கூடுகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. துறை சார்பில் தேனி, ஆண்டிபட்டி, உத்தமபாளையத்தில் தொழில்நுட்ப சேவை மையங்கள் செயல்படுகின்றன.

பட்டு வளர்ச்சி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறதா

மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு மனை பராமரித்தல், பட்டுக்கூடுகளின் விலை உள்ளிட்டவை பற்றி துறை சார்பில் கிராமங்கள், விவசாய கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குகிறீர்களா

மல்பெரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஓசூரில் 7 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் ஓசூரில் உள்ள மல்பெரி பண்ணை, புழு வளர்ப்பு மையம், புழு உற்பத்தி மையம், கூடு ஏலம், கூட்டில் இருந்து நுால் நுாற்பு (பிரித்தல்) நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி கையேடு, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த 10 மாதங்களில் 20 விவசாயிகள் இப்பயிற்சிக்கு சென்று வந்துள்ளனர்.

பட்டு கூடு விலை உயர்ந்துள்ளதா

பட்டுக்கூடு விலை சில மாதங்களாக உயர்ந்துள்ளது. தற்போது தேனி பட்டுக்கூடு அங்காடியில் கிலோ ரூ. 600 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த பத்து மாதங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்த ரூ.5.50 கோடி மதிப்பிலான 12.85 டன் பட்டுக் கூடுகளை வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.8.26 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

பட்டு நுாற்பு நிலையம் எப்போது துவங்கப்படும்

மாவட்டத்தில் கோட்டூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 'ரூர்பன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பில் தானியங்கி பட்டு நுாற்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் அரசு மானியத்தில் சின்னமனுார் அருகே தனியார் மூலம் தானியங்கி பட்டு நுாற்பு நிலையம் அமைகிறது.

விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா

துறை சார்பில் மல்பெரி விவசாயிகளுக்கு களை எடுக்கும் கருவி, புழு வளர்ப்பு வலை, உபகரணங்கள், நடவு மானியம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் 69 விவசாயிகளுக்கு ரூ. 37.72 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிறுகுறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த நலத்திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் குறைந்த பட்சம் ஒரு ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்ய வேண்டும். புழு வளர்ப்பு மனை அமைக்க வேண்டும். இவற்றை ஆய்வு செய்து நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையங்கள் செயல்படுகிறதா

மயிலாடும்பாறையில் அரசு விதைக்கூடு உற்பத்தி மையம் 10 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் விதைகள் ஓசூரில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பட்டுப்புழு முட்டைகள் கிருஷ்ணகிரி, ஓசூரில் மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இளம் பட்டுவளர்ப்பு மையங்கள் பெரியகுளம் லட்சுமிபுரம், போடி மீனாட்சிபுரத்தில் அரசு மானியத்தில் இரு தனியார் மூலம் செயல்படுகிறது. தற்போது கோட்டூரில் அரசு மூலம் மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இங்கிருந்து விவசாயிகளுக்கு இளம் பட்டுபுழுக்கள் வழங்கப்படுகிறது. அதனை வாங்கி, வளர்த்து விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர்.

அடுத்த நிதியாண்டின் இலக்கு என்ன

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் பட்டுவளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மேலும் லாபம் அதிகம் என்பதால் விவசாயிகள் அதிகம் விரும்புகின்றனர். அடுத்த நிதியாண்டில் மேலும் 300 விவசாயிகள் வரை பட்டுக்கூடு உற்பத்தியாளர்களாக மாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

பட்டுப்புழு வளர்க்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் தேனி முத்துத்தேவன்பட்டியில் போடேந்திர புரம் விலக்கு அருகே செயல்படுகிறது. மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு வளர்க்க விரும்பும் விவசாயிகள் நேரடியாக அலுவலகத்தை அணுகலாம். அல்லது 97870 51997 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ