| ADDED : மே 10, 2024 05:32 AM
மூணாறு: கேரளாவில் பிளஸ் 2 தேர்வில் 78.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.மாநிலத்தில் பிளஸ் 2, தொழில் பயிற்சி மேல் நிலை பள்ளி ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. பிளஸ் 2ல் தேர்வு எழுதிய 3,74,755 பேரில் 2,94,888 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவிகிதம் 78.69. கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 82.95 ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 4.26 சதவீதம் குறைந்தது. மிகவும் கூடுதலாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 84.12, மிகவும் குறைவாக வயநாடு மாவட்டத்தில் 72.13 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 7 அரசு பள்ளிகள் உள்பட 126 பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அனைத்து பாடங்களிலும் நூறு சதவீதம் மதிப்பெண் என்ற அடிப்படையில் 39,242 பேர் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர்.அதேபோல் தொழில் பயிற்சி பிரிவில் தேர்வு எழுதிய 27,586 பேரில் 19,702 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 71.42. கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 78.39 ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 6.97 சதவீதம் குறைந்தது.பிளஸ் 2, தொழில் கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொது கல்விதுறை இயக்குனருக்கு கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டார்.இடுக்கி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 83.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.மாவட்டத்தில் தேர்வு எழுதிய 9813 பேரில் 8188 பேர் தேர்ச்சி பெற்றனர். அனைத்து பாடங்களிலும் 1216 பேர் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர். மூணாறு, பீர்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு உண்டு, உறைவிட பள்ளி, குமுளி அட்டப்பள்ளம் புனித தாமஸ் பள்ளி ஆகியவை நூறு சதவீதம் வெற்றி பெற்றன.தொழில் கல்வி பிரிவில் தேர்வு எழுதிய 141 பேரில் 93 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 65. அனைத்து பாடங்களிலும் 6 பேர் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர்.