சொக்கர்முடி மலை ஆக்கிரமிப்பு விசாரிக்க 9 பேர் குழு நியமனம்
மூணாறு: சொக்கர்முடி மலையில் ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்து கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.மூணாறு அருகே அதி தீவிர பேரிடர் பகுதி பட்டியலில் உட்படுத்தப்பட்ட சொக்கர்முடி மலையில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, விதிமீறி கட்டுமானங்கள் நடப்பதாக தெரியவந்தது. அவற்றை விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள வருவாய்துறை அமைச்சர் ராஜன், இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரிக்கு உத்தரவிட்டார்.அதன்படி தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்து கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.குற்றச்சாட்டு: சொக்கர்முடி மலை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளும் கூட்டணியில் முக்கிய கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒருவருக்கு, ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் வசம் உள்ள வருவாய்துறை மீது பழியை சுமத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தப்ப முயலுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட்டை சேர்ந்த சிலர் வருவாய்துறையினருக்கு எதிராக களம் இறங்கினர். அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த அமைச்சருக்கும், அரசுக்கும் ஆக்கிரமிப்பில் தொடர்புள்ளதாக காங்கிரஸ் தலைமை குற்றம் சாட்டுகின்றது. அதனால் சொக்கர்முடி மலை ஆக்கிரமிப்பு பிரச்னை கேரளாவில் சூடு பிடித்துள்ளது.