கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பாசக்கார மனைவி
சின்னமனூர் : தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த பாசக்கார மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.சின்னமனூர் அருகே குச்சனூர் - சங்கராபுரம் ரோடு வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்த காயங்களுடன் செப்., 5 இறந்து கிடந்தார். போலீசார் விசாரித்தனர். கொலையானவர் வீரபாண்டி அருகே மாணிக்காபுரம் சென்றாயன் 40, என தெரிந்தது. சென்றாயன் உடல் அருகே செப்., 4 இரவு டூவீலர் நின்றதாக அதன் பதிவு எண்ணை அவ்வழியாக சென்றவர் போலீசாரிடம் தெரிவித்தார்.டூவீலர் பதிவெண்ணை இணையத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். திருப்பூர் பதிவெண் கொண்ட டூவீலரின் உரிமையாளரான திருப்பூர் அருகே டொம்புசேரியைச் சேர்ந்த வினித்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், ''தன் டூவீலரை உடன் பணிபுரியும் மாணிக்காபுரத்தைச் சேர்ந்த ராஜபிரபு இரவல் வாங்கி சென்றார்,'' என்றார்.போலீசார் விசாரிப்பதை அறிந்த ராஜபிரபு 30, அல்லிநகரம் போலீசில் செப்., 6 சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது சென்றாயன் மனைவி பூங்கொடியுடன் 35, சில மாதங்களாக கள்ளத் தொடர்பு இருந்ததையும், அதை கண்டித்ததால் சென்றாயனை கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ள பூங்கொடிக்கும், திருமணம் ஆகாத தனக்கும் சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்தது. பூங்கொடியின் பெற்றோர் குச்சனூர் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். செப்., 4ல் நானும் பூங்கொடியும் தோட்டத்தில் இருந்தோம். அங்கு வந்த சென்றாயன் எங்களுடன் தகராறு செய்தார். எனக்கும் சென்றாயனுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தோட்ட உரிமையாளர் எங்களை வெளியேற்றினார்.தோட்டத்திற்கு வெளியே போதையில் இருந்த சென்றாயனை கொலை செய்ய பூங்கொடியும், நானும் முடிவு செய்தோம். குச்சனூர் சங்கராபுரம் ரோடு வனப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதால் டூவீலரில் சென்றாயனை நடுவில் உட்கார வைத்து அழைத்து சென்றோம். வனப்பகுதியில் பூங்கொடி கணவரை பிடித்து கொள்ள நான் கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்தேன். அவர் போதையில் இருந்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.இதையடுத்து ராஜபிரபு, பூங்கொடியை போலீசார் கைது செய்தனர். இரண்டே நாட்களில் கொலையாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் பாலாண்டி, எஸ்.ஐ., சுல்தான் பாட்சா மற்றும் போலீசாரை எஸ்.பி., சிவபிரசாத் பாராட்டினார்.