| ADDED : மே 26, 2024 04:28 AM
சின்னமனூர்: சின்னமனூரில் ஆர்.என்.ஆர் விதை நெல் விற்பனையில் 22 டன் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் முதல் போக சாகுபடி பணிகள் துவங்க உள்ளது. கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம் வட்டாரங்களில் சமீப காலங்களில் வீரிய ஒட்டு ரக விதை நெல்லை விவசாயிகள் விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். அதிக மகசூல், நோய் தாக்காது என நினைக்கின்றனர்.இரு ஆண்டுக்கு முன் மகசூல் குறைந்தது. கடந்தாண்டு முதல் போக சாகுபடிக்கு சின்னமனூர், குச்சனூர், கருங்கட்டான்குளம், சீலையம்பட்டி விவசாயிகள் சின்னமனூர் வேளாண்துறை வழங்கிய ஆர்.என்.ஆர் ரக விதை நெல்லை வாங்கி பயன்படுத்தினர். இதில் நல்ல மகசூல் கிடைத்தது. கடந்தாண்டு விதை நெல் 7 டன் விற்பனையானது.கடந்தாண்டு முதல் மற்றும் இரண்டாம் போகங்களில் ஆர்.என். ஆர்.ரகம் மகசூலை அள்ளி தந்தது. எனவே இந்தாண்டும் விவசாயிகள் ஆர்.என். ஆர்., ரகத்தின் பக்கம் திரும்பியது. விவசாயிகளின் மனநிலையை புரிந்து கொண்ட சின்னமனூர் வேளாண் அதிகாரிகள், ஆர்.என்.ஆர். ரகம் இல்லையென்று கூறாமல் விற்பனை செய்தனர்.இதுவரை சாதனை அளவாக 22 டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சின்னமனுார் வட்டாரத்தில் ஒரே ரகம், ஒரே சீராக விவசாயிகள் அனைவரும் ஆர்.என்.ஆர்.,ரக சாகுபடி செய்வதும் , வேளாண் துறை விதை நெல் விற்பனை செய்துள்ளதும் சாதனையாகும். ஆனால் கம்பம், உத்தமபாளையம் வட்டாரங்களில் அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வில்லை. விவசாயிகளும் விரும்பி வாங்கவில்லை.