| ADDED : மே 06, 2024 12:44 AM
ஆண்டிபட்டி: முருக மலைப்பகுதியில் இருந்து நள்ளிரவில் வழி தவறி வந்த காட்டு மாடு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை பூங்காவில் புகுந்தது. இரவு முழுவதும் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.வைகை அணை இடது கரை யானை பூங்கா பின்புறம் உள்ள ரோட்டில் நேற்று முன்தினம் இரவில் வழி தவறி வந்த காட்டு மாடு ஆங்காங்கே சுற்றித்திரிந்தது. அணை பணியாளர் ஈஸ்வரன் இரவு குடும்பத்தினருடன் காரில் சென்ற போது ரோட்டில் காட்டு மாடு நிற்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். தொடர்ந்து 'ஹாரன்' ஒலிக்கச் செய்ததால் அங்கிருந்து நகர்ந்த காட்டுமாடு இடது கரை பூங்காவிற்குள் புகுந்தது. இருட்டில் காட்டு மாடு நடமாட்டத்தை கண்காணிக்க முடியாததால் வைகை அணை, பூங்காவில் இருந்த இரவு காவலர்கள் உஷார் படுத்தப்பட்டனர். வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.பெரியகுளம், ஆண்டிபட்டி வனச்சரகங்களுக்குட்பட்ட அலுவலர்கள் இரவு முழுவதும் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், வைகை அணையை சுற்றியுள்ள பகுதிகளிலும், வெடி வெடித்து தேடினர். ஆனால் காட்டு மாடு எந்த வழியாக சென்றது என்பதை கண்டறிய முடியவில்லை.வனத்துறையினர் கூறியதாவது: கொடைக்கானல் மலையை அடுத்துள்ள முருகமலை வனப்பகுதியில் இருந்து வரட்டாறு ஓடை வழியாக தண்ணீர், உணவு தேடி காட்டு மாடு வழி தவறி வந்து அணை பகுதியில் நுழைந்துள்ளது. காட்டு மாடுகள் கூட்டமாக தான் இருக்கும். வழி தவறிய காட்டு மாடு மீண்டும் வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. அணை நீர்த்தேக்கத்தின் பின்பகுதியில் உள்ள தோட்டங்களில் நேற்று பகலில் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. நீர்தேக்கத்தை சுற்றியுள்ள கிராம மக்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். காட்டு மாடு குறித்து வனத்துறையினருக்கு தெரிவிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.