| ADDED : ஜூலை 30, 2024 06:14 AM
மூணாறு : மூணாறில் தொடரும் மின்தடையால் தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூணாறு நகர் மற்றும் சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு கே.டி.எச்.பி, தேயிலை கம்பெனி மின்சாரம் வினியோகிப்பதுடன் பராமரிப்பு பணிகளையும் கவனிக்கின்றது. கடந்த 2005ல் கம்பெனி வழங்கிய விருப்ப ஓய்வுபடி மின் ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிகளை விட்டுச் சென்றதால் ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அனுபவம் மிக்க ஊழியர்கள் பணிகளை விட்டுச் சென்றதால் மின் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிர்வாகம் முன்வராததால் பராமரிப்பு பணிகளை முறையாக செய்ய இயலவில்லை.தென்மேற்கு பருவ மழையின்போது காற்று, மழை ஆகியவற்றால் மின் வினியோகம் பெரிதும் பாதிக்கப்படும். அதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு மின் தடை தொடர் கதையாகி விட்டது. கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக ஏற்பட்ட மின்தடையால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.இந்நிலையில் இதே கம்பெனிக்குச் சொந்தமான நயமக்காடு எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் நேற்று காலை திடீரென மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் அழுத்தம் அதிகரித்து சுரேஷ், மணிகண்டன், பிரியங்கா, விஜயலெட்சுமி ஆகிய தொழிலாளர்களின் வீடுகளில் டி.வி.,க்கள் உள்பட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. அதேபோல் ஏராளமான வீடுகளில் பல்புகள் வெடித்து சிதறின.