தேனி : தேனி முத்துத்தேவன்பட்டி தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'நீட்' தேர்வு நடந்தது. இத்தேர்விற்கு ஆர்வமுடன் வருகை தந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர், அவர்களுக்கு ஊக்கம் அளித்து வாழ்த்தி தேர்வு எழுத அனுப்பினர். முன்னதாக மாணவர்களிடம் ஹால் டிக்கெட், சான்றிதழ்கள், உடைகள் பரிசோதிக்கப்பட்டு, 'வாட்டர் பாட்டில்' மட்டும் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்கள் உயிரியியல் பகுதி வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க முடிந்ததால், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என நம்பிக்கையுடன் மகிழ்ச்சி தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: மிக எளிதாக இருந்தது
நமீதா, சிலமலை, போடி.உயிரியியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு மிக எளிதாக விடையளிக்க முடிந்தது. தாவரவியலில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்கும். வேதியியல் வினாக்களை ஒப்பிடுகையில் இயற்பியல் வினாக்கள் எளிதாக இருந்தன. தேர்விற்கு நன்றாக தயார் செய்திருந்ததால் நன்றாக எழுதி உள்ளேன். வேதியியல் கேள்விகள் வினைத்தொகுதியில் இருந்து அதிகம் கேட்கப்பட்டு இருந்தன. முதல்முறை எழுதுகிறேன்
ஆனந்த ராஜபாண்டியன், அம்மச்சியாபுரம், தேனி:முதல்முறையாக நீட் தேர்வு எழுதுகிறேன். அதனால் தேர்வறைக்கு சென்ற போது பதட்டமாக இருந்தது. உயிரியியல், வேதியியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் எளிதாக இருந்தன. படித்திருந்த பெரும்பாலான வினாக்கள் வந்திருந்தன. நீட் தேர்விற்காக பொதுத்தேர்வு முடிந்த பின் தினமும் நன்றாக படித்து வந்தேன். பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் தவறாமல் பங்கேற்றேன். அதனால் தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. நன்றாக எழுதி உள்ளேன்
ஆர்.ஆர்த்தி, கம்பம்.நீட் தேர்விற்காக நன்றாக தயார் செய்திருந்தேன். தாவரவியல், இயற்பியல் கேள்விகள் எளிதாக இருந்தன. மனக்குழப்பம் இல்லாமல் பாடங்களை படித்ததால் நிதானமாக தேர்வு எழுதி உள்ளேன். நல்ல மதிப்பெண் கிடைக்கம் என்ற நம்பிக்கை உள்ளது.