| ADDED : மே 24, 2024 03:24 AM
மூணாறு: கோட்டயம், மணர்காடு ஊராட்சியில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கலெக்டர் விக்னேஸ்வரி தெரிவித்தார்.கோட்டயம் மாவட்டம், மணர்காடு பகுதியில் கால்நடைதுறை சார்பிலான உள்ளூர் கோழி வளர்ப்பு மையத்தில் கோழிகள் மொத்தம் மொத்தமாக இறந்தன. அது தொடர்பாக போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீஸ் ஆய்வகத்தில் நடத்திய ஆய்வில் எச்5 என் 1 உறுதி செய்யப்பட்டது. அதனால் அப்பகுதியில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவை பறவை காய்ச்சல் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, கோழி வளர்ப்பு மையத்தில் உள்ள ஒன்பது ஆயிரம் கோழிகள் உள்பட வளர்ப்பு பறவைகளை கருணை கொலை செய்ய உத்தரவிடப்பட்டது. அதேபோல் மணர்காடு ஊராட்சியில் 3 வார்டுகளிலும், புதுப்பள்ளி ஊராட்சியில் 2 வார்டுகளிலும் கோழி, வாத்து உள்பட வளர்ப்பு பறவைகளின் முட்டை, இறைச்சி, உரம் ஆகியவற்றை மறு உத்தரவு வரும் வரை விற்க,வாங்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.கோட்டயம் மாவட்டம் மணர்காடு ஊராட்சியில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்த கலெக்டர் விக்னேஸ்வரி நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டார்.