தேனி: தேனி அருகே போலி ஆவணம் தயாரித்து 29 சென்ட் நிலம் விற்பனை செய்த வழக்கில் நிலம் வாங்கிய மற்றொரு நில புரோக்கர் முருகனை 50, நேற்று கைது செய்தனர்.வீரபாண்டி பேரூராட்சி மாரியம்மன்கோயில்பட்டி லோகிதாசன் மகன் சுரேஷ். இவர் தேனி எஸ்.பி.,யிடம் அளித்த புகாரில், எனது தந்தை, சித்தப்பா கணேசனுக்கு தலா 14.5 சென்ட் வீதம் 29 சென்ட் நிலம் கோடாங்கிபட்டி அருகில் உள்ளது. அதை நானும், எனது சித்தப்பா மகள் மேனகாவும் 14.5 சென்ட் வீதம் தானமாக பெற்றோம். அந்த நிலத்தை பழனிசெட்டிபட்டி பிரின்ஸ், ஆண்டிச்சாமி ஆகியோர் குறைந்த விலைக்கு தங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் நிலத்தின் பாதுகாப்பு கருதி, நானும் மேனகாவும் சத்திரபட்டி நில புரோக்கர் பரமசிவன், அரண்மனைப்புதுாரை சேர்ந்த ராஜேஷ்வரபாண்டியன் ஆகியோருக்கு பவர் ஆப் அத்தாரிட்டி' பத்திரம் எழுதி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். அதன் அசல் பத்திரம் எங்களிடம் உள்ளது.இந்நிலையில் இடத்தை சுத்தம் செய்ய சென்றேன் அப்போது கோடாங்கிபட்டியை சேர்ந்த முருகன், நிலத்தை விலைக்கு வாங்கி இருப்பதாகவும், இனி அங்கு வரக்கூடாது என என்னை மிரட்டினார். இதுபற்றி விசாரித்த போது, எங்கள் நிலத்தை பரமசிவன், ராஜேஷ்வரபாண்டியன் ஆகியோர் இணைந்து, போலி ஆவணங்கள் தயாரித்து, முருகனுக்கு விற்பனை செய்தது தெரிந்தது. எனவே பரமசிவன், ராஜேஷ்வரபாண்டியன், நிலத்தை வாங்கிய முருகன், சார்பதிவாளர் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர கோரினார்.எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி விசாரணை செய்து முருகன், பரமசிவன், ராஜேஷ்வரபாண்டியன், நிலத்தை கேட்டு மிரட்டிய பிரின்ஸ், ஆண்டிச்சாமி ஆகிய ஐவர் மீது மோசடி வழக்குப்பதிந்து, நிலபுரோக்கர் மரமசிவனை மே 25ல் கைது செய்தனர். இந்த வழக்கில் நிலம் வாங்கிய புரோக்கர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.