| ADDED : ஏப் 08, 2024 04:53 AM
தேவதானப்பட்டி, : கிராமப்பகுதிகளில் வேட்பாளர்களை வரவேற்பதற்கு ஆபத்தான நாட்டு வெடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும்.தேனி லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் வருவதற்கு முன்பு அவர்களை 'குஷி' படுத்துவதற்காக நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து வரவேற்கின்றனர். பெரியகுளம் நகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் பெற்ற கடைகளில், பட்டாசு வாங்கி வெடிக்கின்றனர். இந்த கடைகளில் பெரும்பாலும் சிவகாசியில் இருந்து அனுமதி பெற்ற பட்டாசு வாங்கப்படுகிறது. அதே நேரத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சாத்தா கோவில்பட்டி உள்ளிட்ட ஒன்றிய பகுதிகள், உட்கடை கிராமங்களில் ஆபத்தான டப்பாக்களில் தயாரிக்கப்படும் நாட்டு வெடிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது மிக ஆபத்தானது. வெடிக்கும் சத்தத்தின் தன்மையை அதிகப்படுத்துவதற்கு கூடுதலாக மருந்து சேர்க்கப்படுகிறது. இதனால் வெடிக்கும் போது எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம். போலீசார் கண்காணித்து இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.