| ADDED : மே 17, 2024 06:55 AM
கம்பம் : பல ஆண்டுகளாக வலியுறுத்திய செம்மை நெல் சாகுபடி,வரிசை நெல் சாகுபடி அல்லது இயந்திர நடவு முறையை வேளாண் துறை கைவிட்டது ஏன் என்பது தெரியவில்லை. இந்த நடவுமுறைகளுக்கு அரசு மானியம் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப்பெரியாறு பாசனத்தில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. காலத்திற்கு ஏற்ப நெல் சாகுபடியில், நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறை அறிமுகம் செய்தாலும், அதை வலியுறுத்துவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இயந்திர நடவு வேளாண் துறையால் அறிமுகம் செய்யப்பட்டது.இயந்திர நடவிற்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டது. குறைந்த அளவு விதை, குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. உதாரணமாக 80 கிலோ விதை தேவைப்படும் பரப்பிற்கு 8 கிலோ விதை போதுமானது. ஒற்றை நாற்றுகளாக நடப்படும். அதிக தூர்கட்டி நல்ல மகசூல் கிடைக்கும். குறிப்பாக நடவு பணிகளுக்கு ஆகும் செலவு குறையும். தொழிலாளர்கள் தேவையில்லை. பல சிறப்பம்சங்களை கொண்டது. விவசாயிகளை இயந்திர நடவு செய்யுங்கள் என வேளாண் துறை வலியுறுத்தி விவசாயிகளும் இயந்திர நடவுக்கு திருப்பினர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக வேளாண் துறை அதைப்பற்றி பேசுவதில்லை.இயந்திர நடவிற்கு அரசு மானியம் அனுமதிக்கவில்லை. நடவு இயந்திரங்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாலும், இயந்திர நடவு முறைய ஊக்குவிக்கவில்லை என வேளாண் துறையினர் கூறுகின்றனர். தற்போது முதல் போகத்திற்கான நாற்றாங்கால் வளர்க்கும் பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். இந்த ஆண்டிலாவது இயந்திர நடவு முறைக்கு மானியம் பெற்றுத்தர வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.