| ADDED : ஜூன் 11, 2024 07:18 AM
கம்பம் : நாராயணத்தேவன்பட்டி சுருளி அருவி இணைப்பு சாலையில் அதிகாரிகள் அலட்சியத்தில் உரிய காலத்தில் பாலம் பணி துவக்காததால் அரசு ரூ.46 லட்சம் நிதியை திரும்ப பெற்றது.தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்றது சுருளி அருவியாகும். இங்குள்ள அருவியில் குளிக்க தினமும் நூற்றுக்கணக்கில் வருகின்றனர். சுருளி அருவிக்கு செல்ல தற்போதுள்ள ரோட்டை தவிர்த்து, பழைய சுருளி ரோடு உள்ளது. நாராயணத்தேவன்பட்டி, சுருளிப் பட்டியிலிருந்து சுருளி அருவிக்கு செல்லும் ரோடு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. விசேஷ நாட்களில் இந்த ரோடு ஒருவழிப்பாதையாக பயன்படுத்துகின்றனர். ஆனால் நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளிப்பட்டி வரை 160 மீ., தூர ரோடு தனியாரிடம் சிக்கியிருந்தது. சமீபத்தில் அதை மீட்டனர். பின்னர் நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளிப்பட்டி வரை ரோட்டை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் துவங்கியது. ரூ.46 லட்சம் செலவில் பாலம் ஒன்றும், 165 மீ., தூர ரோடு பணிகளுக்கான பூமி பூஜை சில மாதங்களுக்கு முன் நடந்தது. நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் பங்கேற்றார். நூறு நாள் வேறு உறுதி திட்டத்தின்கீழ் 160 மீட்டர் தூரத்திற்கு ரோடு அமைக்கும் பணி நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக ரூ.46 லட்சத்தில் பாலம் கட்டும் பணி துவங்கியிருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால், பாலம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்த ரூ.46 லட்சத்தை, உரிய காலக்கெடுவில் பணிகளை துவக்க வில்லை என கூறி டெண்டரை ரத்து செய்து அரசு நிதியை திரும்ப பெற்றது. இந்த பாலம் அமைக்கப்பட்டிருந்தால் நாராயணத்தேவன் பட்டியிலிந்து சுருளி அருவிக்கு பைபாஸ் ரோடு போன்று பயன்பட்டிருக்கும். ஆனால் கம்பம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பாலம் கட்டும் பணி மேற்கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது.ஒன்றிய பொறியாளர் பாண்டிச்செல்வியிடம் இதுகுறித்து கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார்.