வீட்டில் கஞ்சா செடி: தந்தை, மகன் கைது
தேவதானப்பட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை மாரியப்பன் 65, மகன் பால்பாண்டி 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தேவதானப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டின் காலியிடத்தில் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்த்து வருவதாக தேவதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அப்துல்லா, எஸ்.ஐ.,க்கள் வேல் மணிகண்டன், ஜான் செல்லத்துரை மற்றும் போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்தனர். தேவதானப்பட்டி பிட் 2, வி.ஏ.ஓ., அருள்குமார் மேற்பார்வையில் போலீசார் கஞ்சா செடியை அகற்றினர். மாரியப்பனை போலீசார் கைது செய்த நிலையில் வீட்டு சுவர் ஏறி தப்ப முயன்ற அவரது மகன் பால்பாண்டி கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது.பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பால்பாண்டி 45, போலீஸ் கஸ்டடியில் சிகிச்சை பெற்று வருகிறார்.