| ADDED : ஜூன் 27, 2024 05:04 AM
மூணாறு : பூப்பாறை நகரில் அரசு கையகப்படுத்திய கட்டடங்களை அகற்றுமாறு கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.இடுக்கி மாவட்டத்தில் கேரள, தமிழக எல்லையான போடிமெட்டில் இருந்து 10 கி.மீ., தொலைவில் பூப்பாறை நகர் உள்ளது. அங்கு பன்னியாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 39 கட்டடங்கள், 46 கடைகள், 3 வழிபாட்டு தலங்கள் என 88 கட்டங்களை கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுபடி வருவாய்துறை அதிகாரிகள் பிப்.,7ல் கையகப்படுத்தினர்.அதன்பின் கரையோரம் உள்ள கட்டடங்களால் ஆற்றின் நீர் போக்கு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மழை காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கட்டடங்கள் பொது மக்களுக்கும், கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளில் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து என தெரியவந்தது. அதனால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படி கையகப்படுத்திய கட்டடங்களை அகற்றுமாறு சாந்தாம்பாறை ஊராட்சி செயலருக்கு, கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார்.88 கட்டடங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அதில் 14 பேர் அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அந்த வழக்கில் 14 பேரின் கைவசம் உள்ள கட்டடங்களின் தற்போதைய நிலை தொடரட்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அவை தவிர எஞ்சிய கட்டடங்கள் அனைத்தும் 30 நாட்களுக்குள் அகற்றுமாறும், கட்டடக் கழிவுகளை குவிப்பதற்கு ஜூலை 11 க்குள் இடம் தேர்வு செய்யுமாறும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.