| ADDED : ஜூன் 23, 2024 04:36 AM
மூணாறு: மூணாறு அருகே தேவிகுளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற வருவாய்துறை அதிகாரிகளை இந்திய கம்யூ., பிரமுகர் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மூணாறு அருகில் உள்ள தேவிகுளம் தாலுகா தலைமையிடமாக உள்ளது. அங்கு சமூக சுகாதார மையம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து 'ஷெட்' அமைக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு மூன்று முறை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் தொடர்ந்தது.அதனை அகற்ற தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு தாசில்தார் லதீஷ்குமார் தலைமையில் வருவாய்துறையினர், நிலம் பாதுகாப்பு படையினர் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றபோது, இந்திய கம்யூ., உள்ளூர் செயலாளர் ஆரோக்கியதாஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து ஆபாசமாக திட்டியதுடன், இதற்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றிய அதிகாரியை பணி இடமாற்றம் செய்தது போன்று இடமாற்றம் செய்து, வீட்டிற்கு அனுப்புவோம் என மிரட்டினார். அவர் மிரட்டும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதியில் அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர்.