பெரியகுளம்: பெரியகுளம் மேலலப்புரவு பகுதியில் உள்ள செட்டிகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்பால் சுருங்கி மழைநீர் தேங்கும் பரப்பளவு குறைகிறது. கீழ வடகரை ஊராட்சி அழகர்சாமிபுரம் பொதுமக்கள் குப்பை கொட்டி எரிந்து மாசுபடுத்துகின்றனர்.கொடைக்கானல் மலையடிவார பகுதியில் உற்பத்தியாகி சின்னூர் ஆறு, பேக்கோம்பை ஆறு, குப்பாம்பாறை ஆறுகள் சங்கமித்து பெரியாறாக உருமாறி கல்லாற்றில் கலக்கிறது. அங்கிருந்து வரும் தண்ணீர் செட்டிகுளத்தில் தேங்குகிறது. 30 ஏக்கர் பரப்பளவிலான இக்கண்மாய் நீரினை நம்பி மேலப்புரவு பகுதியில் 500 ஏக்கர் நேரடியாகவும், பல நூறு ஏக்கர் மறைமுகமாகவும் ஆண்டுக்கு மூன்று போகம் நெல் சாகுபடிக்கு முன்பு உதவியது. கடந்த சில ஆண்டுகளாக செட்டிகுளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி பாதிக்கு பாதி, பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் கண்மாய் சுருங்கி காணாமல் போகும் அபாயம் உள்ளது.இக் கண்மாய் நீரினால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிணறுகளுக்கு ஊற்று கிடைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அழகர்சாமிபுரம் பகுதியில் 80 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. கண்மாய் ஆக்கிரமிப்பினால் நீர் தேங்கும் அளவு குறைந்து நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது. இதனால் 220 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து கண்மாய் ஆக்கிரமிப்பை தடுக்காவிட்டால் வரும் காலங்களில் 500 அடியில் தண்ணீர் கிடைக்கும் அபாய நிலை உருவாகும்.சிறு, குறு விவசாயிகள் கண்மாய் ஆக்கிரமிப்பினால் நிலத்தை விற்று விட்டு விவசாயத்திலிருந்து விலகி வருகின்றனர்.'பள்ளி செல்லாமல் இடைநிற்றல் மாணவர்களை கல்வித்துறை கண்காணித்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதைப்போல்' விவசாயத்திலிருந்து விலகி நிற்கும் விவசாயிகளை விவசாயத்தை தொடர கண்மாயில் முழுமையாக மீட்டு நீர் தேக்க வேண்டும், கண்மாயை மீட்க வேண்டும்
கணேசன், விவசாயி, பெரியகுளம்: இந்த கண்மாய் நீரினை நம்பி எனக்கு 3 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. எனது தாத்தா, அப்பா, நான் மூன்று தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆடி பெருக்கின்போது குடும்பத்தோடு கண்மாய் கரையில் சாமி கும்பிட்டுவோம். தற்போது கண்மாய்கரை அசுத்தமாக உள்ளதால் கண்மாய்க்குள் செல்வதில்லை. கண்மாயில் மா, வாழை, இலவம், கரும்பு உள்ளிட்டவை ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர் இதனால் கண்மாய் நீரை நம்பி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. ஆக்கிரமிப்பால் கண்மாயில் ஓடையாக மாறி வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்ற நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் விவசாயம் குறைந்தது
நாகபாலாஜி, விவசாயி, பெரியகுளம்: கண்மாய் ஆக்கிரமிப்பால் விவசாயத்தின் மீது ஈடுபாடு குறைந்து வருகிறது. கண்மாயில் நீர் நிரம்பினால் ஏராளமான கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும். ஆக்கிரமிப்பினால் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. நீர்வளத்துறையினர் முதல் கட்டமாக கண்மாயினை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.