| ADDED : ஏப் 29, 2024 05:52 AM
போடி: போடி பகுதியில் மழை பெய்யாததால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு விவசாயிகளிடம் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது.மாவட்டத்தில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். பால் மாடு வளர்ப்பதால் பால் உற்பத்தி, கன்றுகள் வளர்ப்பு, மாட்டு கழிவுகள் உரமாக பயன்படுவதால் லாபரமான தொழிலாக இருந்தது. சோளம், மக்காச்சோளம் போன்ற பயிர்களின் அறுவடைக்கு பின் கிடைக்கும் அதன் தட்டை கழிவுகளை வைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வந்தனர். தோட்டம், வரப்பு மற்றும் வாய்க்கால் பகுதியில் கிடைக்கும் பச்சை தீவனங்கள் மூலம் பால் மாடுகளை வளர்த்தனர்.ஆனால் சில மாதங்களாக பருவ மழை பெய்யாததால் ஆறு, கண்மாய்கள், தோட்டங்களில் உள்ள கிணறுகள் நீர் இன்றி வறண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விளை நிலங்கள் தரிசாக மாறி பச்சை தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளன. மானாவாரியாக பயிரிடப்படும் நிலக்கடலை சரியான விளைச்சல் இன்றி மகசூல் பாதித்துள்ளது. போடி அருகே சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்கபுரம், தர்மத்துப்பட்டி பகுதியில் நிலக்கடலை பயிரிடப்படாமல் தக்காளி, துவரை பயிரிட்டு வருகின்றனர். மாட்டுத்தீவனமாக பயன்படும் நிலக்கடலை, சோளம் பயிர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளை வளர்த்து வரும் சிறு விவசாயிகள் மாட்டுத் தீவனத்திற்காக குறைந்தது 3 கி.மீ., தூரம் உள்ள போடி சுற்றி உள்ள மலை அடிவார பகுதிக்கு சென்று பச்சை தீவனங்களை டூவீலரில் கொண்டு வரும் நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்ட முடியாத நிலையில் விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்து வருகிறது.