| ADDED : ஜூன் 08, 2024 05:49 AM
தேனி: மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆர்.டி.ஓ.,க்கள் தாட்சாயினி, முத்துமாதவன், மாவட்ட சமூக நல அலவலர் சியாமாளதேவி முன்னிலை வகித்தனர். அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் ஜூன் முதல் செப்., வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.பொது கட்டடங்களை முகாம்களாக பயன்படுத்த தகுதி உள்ளதாக இருக்கிறதா என ஆய்வு செய்திட வேண்டும். நீர்நிலைப் புறம்போக்குகளான ஆறு, ஏரி, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நிர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றிட வேண்டும். நீர்நிலை கரைகளை பலப்படுத்த நீர்வளம், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். வி.ஏ.ஓ.,க்கள் ஆர்.ஐ.,க்கள் அவசர காலத்தில் மக்களை வெளியேற்றவும், தங்க வைக்கவும் கிராமங்களில் தேவையான வசதிகளை தயார் செய்து வைப்பது அவசியம். பகுதிகளை கண்டறிந்து தீயணைப்பு துறை செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும். சிறுவர், சிறுமியர் நீர்நிலைகளில் இறங்காமல் உயிரிழப்புக்களை தவிர்க்க ஆழமான பகுதிகளில் விளம்பர பலகைகளை கரைகளின் வைக்கவும், வெள்ளத்தடுப்பு பணிமேற்கொள்ள வேண்டும்.பேரிடர் கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் 04546 250101 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விதைகள், உரங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்திட ஆலோசனை வழங்கினார்.