| ADDED : ஜூலை 31, 2024 05:49 AM
மூணாறு, : இடுக்கி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி அணைகள் திறக்கப்பட்டன.இம்மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரி மழை 31.64 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக தேவிகுளம் தாலுகாவில் 198.4 மி.மீ., மழை பெய்தது. பிற தாலுகாக்கள் உடும்பன்சோலை 72, பீர்மேடு 165, இடுக்கி 124.4, தொடுபுழா 105.4 மி.மீ., மழை பதிவானது.மாவட்டத்திற்கு நேற்று கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதனிடையே இடுக்கி உள்பட எட்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மதியத்திற்கு பிறகு அதி தீவிர மழைக்கான ' ரெட் அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்ததால் மக்கள் கலக்கம் அடைந்தனர்.அணைகள் திறப்பு: மாவட்டத்தில் மழை தொடருவதால் பாதுகாப்பு கருதி கல்லார்குட்டி அணையில் ஐந்து ஷட்டர்கள் தலா 90 செ.மீ., வீதம் உயர்த்தி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் முதிரைபுழை, பெரியாறு ஆகிய ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டது.அதேபோல் பொன்முடி அணையில் ஒரு ஷட்டர் 20 செ.மீ., உயர்த்தி 15.77 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.மூணாறு அருகே அடிமாலி 14ம் மைல் பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் அங்கு வசித்தவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். பைசன்வாலி டீ கம்பெனியில் சுற்றுச்சுவர் இடிந்து வீடு சேதமடைந்தது. ராஜகுமாரி கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஏழு குடும்பங்களை கஜானா பாறை அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.அதேபோல் மூணாறில் மவுண்ட் கார்மல் பேராலயத்திற்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள நிவாரண முகாமில் 42 பேர் தங்கி வருகின்றனர்.கஞ்சிகுழி ஊராட்சியில் புன்னையாறு பகுதியில் ஜோஷி என்பவரது வீடு மழையில் முற்றிலுமாக சேதமடைந்தது.மாங்குளம் குறத்திகுடிக்கு செல்லும் ரோட்டில் பாலம் சேதமடைந்ததால், அப்பகுதி துண்டிக்கப்பட்டது. அதனால் மழைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஓடை மீது கட்டப்பட்ட பாலம் சேதமடைந்ததால், இடமலைகுடி ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ரேசன் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கட்டுப்பாட்டு அறை: மாவட்டத்தில் மழை பாதிப்புகளை தெரிவித்து உதவும் வகையில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா வாரியாக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன.