பெரியகுளம், : பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் செங்குளம் கண்மாய் நீரில் படர்ந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியை தொடர்ந்து விரைவில் கண்மாய் துார் வாரும் பணியை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.லட்சுமிபுரத்தில் 50 ஏக்கரிலான செங்குளத்தில் சிலமாதங்களாக ஆகாய தாமரை நீரின் மேற்பரப்பு தெரியாத அளவிற்கு வளர்ந்தது. லட்சுமிபுரம் ஊராட்சி கழிவுநீரும் இக்கண்மாயில் கலந்ததால் ஆகாயத்தாமரை அதிகளவில் வளர்ந்தது. க்ஷஇதில் கொசு உற்பத்தியாகி மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மற்றும் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் முயற்சியால் தொழில் நிறுவனங்களில் சமூக பாதுகாப்பு நிதி மூலம் ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. செடிகள் அகற்றும் பணி ஒரு பகுதியில் நடந்தால் மறுபகுதியில் மீண்டும் செடிகள் வளர்ந்து சவாலாக மாறியது. இதன் பின் செங்குளத்தில் உள்ள 20 அடி நீரை அருகில் உள்ள கருங்குளத்திற்கு ராட்சத மோட்டார் மூலம் 10 நாட்களாக 24 மணி நேரமும் குழாய் மூலம் தண்ணீர் கடத்தப்படுகிறது. தண்ணீர் கடத்துவதில் ஏற்பட்ட சிரமங்களை போக்குவதற்காக பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த மடை பழுது நீக்கப்பட்டது. தற்போது 75 சதவீத ஆகாய தாமரை அகற்றி அதன் கழிவுகள் டிராக்டர் மூலம் வேறு இடத்தில் கொட்டப்படுகிறது. இப் பணி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இப் பணியை தொடர்ந்து கண்மாய் துார்வார திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.11.60 லட்சம் செலவு
கார்த்திகேயன், கிராம கமிட்டி தலைவர், லட்சுமிபுரம்: இக் கண்மாயில் ஆகாயத்தாமரை வளர்ந்து மக்களை சங்கடப்படுத்தியது. மே 28 முதல் மிதவை வாகனம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றி மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் கழிவுகளை டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. ஆகாயத்தாமரை அகற்ற செங்குளத்திலிருந்து, கருங்குளத்திற்கு 100 குதிரை திறன் கொண்ட ராட்சத மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி கடத்தப்பட்டு வருகிறது. இந்தப்பணி துவங்கி 29 நாட்கள் ஆகிறது. தினமும் ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.11.60 லட்சம் செவாகியுள்ளது. ஊர் பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். இன்னும் சில தினங்களில் ஆகாயத்தாமரை முழுவதுமாக அகற்றப்பட உள்ளது.கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்மணி, விவசாயி, லட்சுமிபுரம்: ஊராட்சியில் 9 வார்டுகளில், கிருஷ்ணாபுரத்தை தவிர 8 வார்டு சாக்கடை கழிவுநீர் கண்மாயில் கலப்பதை தடுக்க வேண்டும். கண்மாயில் கழிவுநீர் கலப்பாதல் நீர் ஆதாரங்கள் பாதிக்கிறது. கழிவுநீர் கலக்காமல் தடுக்க நீர் மேலாண்மை திட்டத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் பணி மேற்கொள்ள உதவிட வேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைக்க முடிவு
ஜெயமணி ஊராட்சி தலைவர், லட்சுமிபுரம்:கண்மாயில் சாக்கடை கழிவு நீர் கலக்காமல் தடுப்பதற்கு, மாவட்ட நீதிமன்றம் ரோட்டின் கிழக்கே ஆரம்பித்தது மறுகால் துறை அருகே ஒரு கி.மீ., தூரத்திற்கு சாக்கடை கட்டுவதற்கு திட்டம் தயாராகி வருகிறது. திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய கோரியுள்ளோம் என்றார்.