ஆண்டிபட்டி தாலுகாவில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள அம்மச்சியாபுரம், குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, ஸ்ரீரங்கபுரம், அய்யணத்தேவன்பட்டி, வேகவதி ஆசிரமம், அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை, மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகம் உள்ள பல கிராமங்களில் இறவை பாசன நிலங்களில் ஆண்டு முழுவதும் விவசாயம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த கிராமங்களில் தென்னை, இலவம், கொட்டை முந்திரி சாகுபடி அதிகம் உள்ளது. இரு ஆண்டுகளாக கை கொடுத்துள்ள மழையால் விவசாயக் கிணறுகள் போர்வெல் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. தரமான மண் வளம், நீர் வளம் இருந்தும் விவசாயிகள் தங்கள் வசம் உள்ள நிலங்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே விவசாயத்தை தொடர்கின்றனர். தொழிலாளர்கள் தேவை அதிகரிப்பு
விவசாயிகள் கூறுகையில்,விவசாய பணிகளில் ஈடுபட பெரும்பாலானவர்களிடம் ஆர்வம் இல்லை. இளைய தலைமுறையினர் மாற்றுத்தொழில் தேடி வெளியூர் சென்று விட்டனர். விவசாயத்தில் உழவு, பாத்தி அமைத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல், களை எடுத்தல், அறுவடை பணியின் போது கூடுதலான ஆட்கள் தேவைப்படுகின்றனர். அந்தந்த கிராமங்களில் உள்ள விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்போது பக்கத்து கிராமங்களில் இருந்து ஆட்களை வேலைக்கு அழைத்துவர வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் பல கிராமங்களில் கூடுதலான ஆட்கள் தேவைப்படும்போது பற்றாக்குறையால் பணிகள் பாதிப்படைகிறது. வெளியூர்களில் இருந்து கூலியாட்களை அழைத்து வரும்போது கூடுதல் செலவாகிறது. அவர்களுக்கான சம்பள செலவு தினமும் நபர் ஒன்றுக்கு ரூ.300 முதல் 500 வரை ஆகிறது. கூடுதலான செலவு செய்த விவசாயத்தின் விளை பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காத போது விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். சொந்த தொழிலாக விவசாயத்தை மேற்கொண்டால் மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும். கூலி ஆட்கள் இன்றி சொந்த தொழிலாக விவசாயத்தை மேற்கொள்பவர்களால் அதிக பரப்பில் விவசாயத்தை தொடர முடியாது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிக்குச் செல்பவர்கள் விவசாயப் பணிகளை தவிர்த்து விடுகின்றனர். இதனால் ஆட்கள் பற்றாக்குறை தொடர்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத்தை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.