பருவமழை துவங்கும் முன் பாலம் கட்டுமானப் பணி முடிக்க வேண்டும் அமைச்சர் பெரியசாமி உத்தரவு
தேவதானப்பட்டி : 'மேல்மங்கலம் வராகநதி குறுக்கே பாலம் கட்டுமானப் பணியை வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் முடிக்க வேண்டும்.' என, அமைச்சர் பெரியசாமி உத்தரவிட்டார்.பெரியகுளம் அருகே மேல்மங்கலம் வராகநதியின் குறுக்கே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நபார்டு திட்டத்தில் ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பாலம் கட்டுமான பணிகளை அமைச்சர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் அவர், 'பருவமழை துவங்குவதற்கு முன் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும்.' என, உத்தரவிட்டார். பின் மேல்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். கலெக்டர் ஷஜீவனா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன், பெரியகுளம் ஒன்றியத் தலைவர் தங்கவேல், பி.டி.ஓ., மலர்விழி, மேல்மங்கலம் ஊராட்சித் தலைவர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.