| ADDED : ஜூன் 07, 2024 06:37 AM
மூணாறு: இடுக்கி மாவட்டம் பைனாவ் அருகே 56 காலனியில் மாமியார், அவரது பேத்தி ஆகியோரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.பைனாவ், 56 காலனியைச் சேர்ந்தவர் அன்னக்குட்டி 62, இவரது மகள் பிரின்சியை கஞ்சிகுழியைச் சேர்ந்த சந்தோஷ் 46, இரண்டாவதாக திருமணம் செய்தார். தற்போது இத்தாலி நாட்டில் பிரின்சி நர்ஸ்சாக பணியாற்றுகிறார். அவர் வெளிநாட்டில் வேலைக்கு சென்றதில் சந்தோஷ்க்கு விருப்பம் இல்லை. அதனால் மனைவி பிரின்சியை திரும்பி வர கூறுமாறு மாமியார் அன்னக்குடியிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தார். அப்பிரச்னை தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தன்னிடம் இருந்த பெட்ரோலை அன்னக்குடி, அவரது மகன் லின்சியின் இரண்டரை வயது மகள் லியா ஆகியோர் மீது ஊற்றி தீ வைத்தார். அதில் அன்னக்குடிக்கு 30, லியாவுக்கு 15 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்டன. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்திற்கு பிறகு சந்தோஷ் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இச் சம்பவத்தை தொடர்ந்து இடுக்கி செருதோணியில் சந்தோஷின் சகோதரர் சுகதன் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டலை அன்னக்குட்டியின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.