பணம், நகைக்காக மூதாட்டி கொலை உடலை கிணற்றில் வீசிய கொடூரம் கொலையானவரின் அலைபேசி பஸ்சில் மீட்பு
கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே மரிக்குண்டுவைச் சேர்ந்த பவுன்தாயை 60, கொலை செய்து பாழடைந்த கிணற்றில் வீசி சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். பஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பவுன்தாயின் அலைபேசியை போலீசார் கைப்பற்றினர்.பவுன்தாயின் கணவர் ஜெயக்கொடி இறந்து விட்டார். பவுன்தாய் வீடு ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ளது. ரயில்வேயில் வேலை செய்யும் மகன் சந்திரசேகர் மதுரையில் வசிக்கிறார். கறவை மாடுகளை பராமரித்து வந்த பவுன்தாயிடம் சிலர் வட்டிக்கு பணம் பெற்றுள்ளனர். இதில் கிடைக்கும் பணம், நகைகளை வீட்டில் பவுன்தாய் பாதுகாத்து வந்துள்ளார்.இந்நிலையில் மரிக்குண்டு தோட்ட கிணற்றில் நேற்று முன்தினம் செப்., 12ல் பவுன்தாய் உடல் மிதந்தது. அவர் பணம், நகைகளுக்கான கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா அல்லது உயிருடன் கடத்திச்செல்லப்பட்டு கழுத்தை நெரித்து கிணற்றில் தள்ளப்பட்டாரா என இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் தனிப்படையினர் விசாரிக்கின்றனர். பவுன்தாய் வீட்டில் சில தடயங்களையும் தனிப்படையினர் கைப்பற்றினர். பஸ்சில் அலைபேசி
பவுன்தாய் அலைபேசி எண் பல்வேறு ஊர்களில் உள்ளதாக சிக்னல் காட்டியதால் போலீசார் குழப்பமடைந்தனர். ராமேஸ்வரம் டூ குமுளி அரசு பஸ்சில் சிக்னல் காட்டியதை உறுதி செய்து போலீசார் சம்பந்தப்பட்ட அந்த பஸ்சில் பயணித்த அனைத்து பயணிகள், அலைபேசிகளை ஆய்வு செய்தனர். ஆனால் பவுன்தாய் அலைபேசியை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அலைபேசி சிக்னல் தொடர்ந்து அந்த பஸ்சில் காட்டியதால் குழப்பம் அடைந்த போலீசார் மீண்டும் பஸ்சை முழுமையாக சோதனையிட்டனர். பயணிகள் சீட்டிற்கு அடியில் அந்த அலைபேசி ஒளித்து வைக்கப்பட்டது தெரிந்தது. போலீசை குழப்ப பவுன்தாய் அலைபேசியை கொலையாளிகள் பஸ்சில் ஒளித்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.போலீசார் கூறியதாவது: பவுன்தாயிடம் கொடுக்கல், வாங்கல் வைத்திருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. சிலர் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். நகை, பணத்துக்காக கொலை நடந்துள்ளது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார்.