| ADDED : ஜூன் 03, 2024 03:39 AM
கம்பம்: : தேனி மாவட்டத்தை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் 10 பேர்களுக்கு கேரளாவில் இயற்கை விவசாயம், பயிர்களில் ஏற்படும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.தமிழக வேளாண் துறையில் அட்மா (ATMA) வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை ஏஜென்சி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தை சேர்ந்த 10 வேளாண் அதிகாரிகளுக்கு கேரள மாநிலத்தில் பல்வேறு பயிற்சிகள் தரப்பட்டன. முதலில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வேளாண் பயிற்சி நிலையம் ஒன்றில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி குறித்து விளக்கப்பட்டது. இம்மையத்தில் முழுக்க முழுக்க பல்வேறு பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது.அடுத்து இடுக்கி மாவட்டம் மயிலாடும்பாறையில் உள்ள ஏலக்காய் ஆராய்ச்சி நிலையத்தில், ஏலக்காய் சாகுபடி, தாக்கும் நோய்கள், தடுக்கும் விதம் பற்றி பயிற்சி வழங்கப்பட்டன. கொச்சியில் உள்ள பாக்ட் உரத் தொழிற்சாலையில் உரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும், அதற்குரிய மூலப்பொருட்கள் பற்றியும் விளக்கினர். திருச்சூரில் உள்ள வேளாண் பல்கலையில் நவீன தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. ஐந்து நாட்கள் நடந்த பயிற்சியில் தேனி வேளாண் தரக்கட்டுப்பாடு அலுவலர் பிரசன்னா, சின்னமனூர் உதவி இயக்குநர் பாண்டி, கம்பம் வேளாண் அலுவலர் விஷ்ணு உள்ளிட்ட 10 அதிகாரிகள் பங்கேற்றனர். வேளாண் தொழில்நுட்ப செயல்முறை விளக்கம், கற்றுணர்வது, நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் பற்றி இப்பயிற்சிகளில் விளக்கி கூறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.