| ADDED : ஜூன் 26, 2024 07:55 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.தமிழகத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் கடந்தாண்டு டிசம்பரில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடந்தது. முகாமில் மின்வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, போலீஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட 15 துறைகள் சார்பில் மனுக்கள் பெறப்பட்டன. அவை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு மாதத்தில் தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.மாவட்டத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் 83 சதவீத மனுக்கள் ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட்டன.மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் இம்முகாம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடந்தது.முகாம் ஜூலை 2வது வாரத்தில் 5 ஊராட்சிகளுக்கு ஒரு முகாம் வீதம் 30 நாட்களில் 30 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.