உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடாங்குளத்தில் குப்பை, கழிவுநீர் சேர்வதால் மாசுபடும் அவலம் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் நீர் பிடிப்பு பகுதி

போடாங்குளத்தில் குப்பை, கழிவுநீர் சேர்வதால் மாசுபடும் அவலம் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் நீர் பிடிப்பு பகுதி

பெரியகுளம்: போடாங்குளம் ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுவது, கழிவு நீர் கலப்பதால் பல்வேறு வகையில் மாசுபட்டு 'குப்பை குளமாக' மாறிவருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் நீர் பிடிப்பு பகுதியில் மரக் கன்றுகள் நட்டு தோப்புகளாக உருவாக்கி வருவதால் நீர் பிடிப்பு பகுதி சுருங்கி வருகிறது.பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரம் பகவதியம்மன் கோயில் பகுதியிலிருந்து தெய்வேந்திரபுரம் -கும்பக்கரை இணைப்பு ரோடு கீழவடகரை ஊரின் மையத்தில் போடாங்குளம் உள்ளது. மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட 30 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த குளத்திற்கு கும்பக்கரை அருவியிலிருந்து வெளியேறும் நீர், அரசமரத்து ஊரணி வழியாகவும், மழை காலங்களில் வரும் காட்டுவாரி நீர் வரும். கண்மாய் அருகே ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட 'தைலாரம்மன் வைத்தீஸ்வரன்' கோயில் உள்ளது. கோயில் திருவிழா காலங்களில் 'போடாங்குளத்திற்கு' நன்றி செலுத்தும் விதமாக 'தெப்பக்குளம்' வைபவம் நடக்கும். பக்தர்கள் குளத்தில் குளித்து கோயிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு செல்வது வழக்கம்.

ஆக்கிரமிக்க குப்பை டெக்னிக்

இக் குளத்தில் 50 சதவீத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கீழவடகரை ஊராட்சியில் சிலர் குளத்தில் முதலில் 'குப்பை' கொட்டப்பட்டும். தொடர்ந்து குப்பை கொட்டி மேடான நிலையில் நாளடைவில் அந்த இடத்தில் தென்னக்கன்றுகள் நட்டு நீர் வரத்து பாதை மூடப்படுகிறது. ஒருவர் இப்படி குளத்தை ஆக்கிரமித்தால் மற்றொருஆக்கிரமிப்பாளர்கள் 'சிண்டிகேட்' அமைத்து, தென்னை, இலவம் மரங்கள் வளர்த்து பல லட்சங்கள் வருவாயை அனுபவித்து 'உள்குத்தகைக்கு' விடும் அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரம் கை ஓங்கியுள்ளது.போடாங்குளத்தில் தொடர்ந்து குப்பை கொட்டி வருவதால் நீர் நிலை 'குப்பை குளமாக' மாறியுள்ளது. இதனால் போடாங்குளம், தெய்வேந்திரபுரம் ரோடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.

'நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்'

ராஜாமுத்து, விவசாயி, பெரியகுளம்: இக் குளத்தின் நீரை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கரில் இருபோகம் நெல் சாகுபடி நடந்தது. தென்னை, மா, கரும்பு விவசாயம் களைகட்டும். முன்பு இந்தப்பகுதியில் விளைச்சலை பார்த்து 'போட்டி போட்டுக்கொண்டு' நிலங்களை குத்தகைக்கு எடுப்பர். தற்போது குளம் ஆக்கிரமிப்பினால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு விவசாயம் செய்பவர்கள் குறைந்து வருகின்றனர். இந்தப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் 40 அடி முதல் 50 அடியில் நிலத்தடி நீர்மட்டம் கிடைக்கும். தற்போது சில இடங்களில் 200 அடிக்கு தோண்டினால் தான் நீர் வருகிறது. நீர்வளத்துறை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில் எதிர்கால சந்ததியினர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அபாயநிலை ஏற்படும்.

கழிவுநீரால் மாசுபடும் அவலம்

குழந்தைவேல்,விவசாயி, பெரியகுளம்: குளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. தெய்வேந்திரபுரம், பெருமாள்புரம் பகுதி கழிவுநீர் குளத்தில் கலப்பதால் நீர்நிலைகள் முழுவதும் பாசி படர்ந்தும், ஆகாயத்தாமரையால் மாசுபட்டுள்ளது. மதகு முழுவதும் சேதப்படுதப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலப்போக்கில் கண்மாய் முழுவதும் களவாடப்பட்டு குடியிருப்பு பகுதியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலரது சுயநலத்திற்காக ஆயிரக்கணக்கானோர் தண்ணீருக்கு சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை