| ADDED : ஏப் 28, 2024 04:10 AM
கம்பம் : ஊராட்சிகளில் சப்ளை செய்யும் குடிநீரில் குளோரின் உரிய விகிதத்தில் கலப்பதில்லை, சரியான விகிதத்தில் குளோரின் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய வேண்டியது உள்ளாட்சி நிர்வாகங்களின் கடமையாகும். நகராட்சிகளில் மட்டும் குளோரின் உரிய விகிதத்தில் கலந்து குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. பேரூராட்சிகளிலும் பல நிர்வாகங்கள் குளோரின் கலப்பை கண்டு கொள்வதில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது, சுத்திகரிப்பு செய்து, உரிய விகிதத்தில் குளோரின் கலந்து சப்ளை செய்வதாகும். ஊராட்சிகளில் சுத்திகரிப்பு செய்வதற்குரிய வசதிகள் எந்த ஊராட்சியிலும் இல்லை. சுத்திகரிப்பு செய்யாவிட்டாலும், உரிய அளவில் குளோரின் கலந்திட வேண்டும். ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் குளோரின் கலக்க வேண்டும். குளோரின் கலப்பதன் மூலம், குடிநீரில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.ஆனால் ஊராட்சிகளில் குடிநீரில் குளோரின் கலக்காமல் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆற்றில் 'பம்பிங்' செய்து தண்ணீரை அப்படியே சப்ளை செய்கின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதால், மாசுபட்டதாக உள்ளது. அந்த தண்ணீரை அப்படியே பம்ப் செய்து வினியோகம் செய்கின்றனர். மேல்நிலைத் தொட்டிகளில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரங்களை ஆய்வு செய்திட வேண்டும். கோடை காலம் என்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சப்ளை செய்யும் குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சி தலைவர்களும், செயலரும் இந்த பணியை கண்காணிப்புடன் செய்ய வேண்டும்.