| ADDED : மே 29, 2024 08:44 PM
தேனி:பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று வழங்க ரூ. ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாசில்தார் காதர்ஷெரீப் 48, உடல் நிலை குணமடைந்ததால் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா முன்னிலையில் கைது செய்யப்பட்டார்.மதுரை ஆரப்பாளையம் கஸ்துாரிபாய் நகரை சேர்ந்த எண்ணெய் வியாபாரி சுப்பிரமணியம் 57. இவரது சொந்த ஊர் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி. இங்கு இவரது மனைவி செல்வி, மைத்துனரின் மகள் காயத்திரிக்கு சொந்தமான 1 ஏக்கர் 91 சென்ட் நிலம் உள்ளது. 2023 ஜூனில் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று கோரி விண்ணப்பித்தார். இவரது மனு ஆண்டிபட்டி தாசில்தார் காதர்ஷெரீப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டது. தாசில்தார் சான்று வழங்கவில்லை. அலைக்கழிப்பு
சுப்பிரமணியம் தாசில்தாரை நேரில் தொடர்பு கொண்டார். தாசில்தார் பல்வேறு காரணங்களால் மே 22 முதல் 24 வரை அலைகழித்தார். பின் மே 25ல் தனது டிரைவருடன் இடத்திற்கு வந்து ஆய்வு செய்த தாசில்தார் ரூ.1 லட்சம் லஞ்சம் வழங்கினால் தான் தடையில்லா சான்று வழங்கப்படும் என்றார். இதனால் சுப்பிரமணியம், தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுந்தரராஜனிடம் புகார் அளித்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம்மாலை ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் சுப்பிரமணியத்திடம் இருந்து தாசில்தார் காதர்ஷெரீப் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றார். அங்கு மறைந்து இருந்த டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் தாசில்தாரை கைது செய்ய முயன்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தார். எனவே அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று தாசில்தார் காதர்ஷெரீப் உடல்நிலை குணமடைந்ததை உறுதி செய்த பின் தேனி தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா முன்னிலையில் மருத்துவமனையிலேயே அவரை போலீசார் கைது செய்தனர்.