உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி ஆசிரியர்கள் ஒட்டு மொத்த விடுப்பு ஏமாற்றத்துடன் திரும்பிய குழந்தைகள்

பள்ளி ஆசிரியர்கள் ஒட்டு மொத்த விடுப்பு ஏமாற்றத்துடன் திரும்பிய குழந்தைகள்

ஆண்டிபட்டி: அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ ஜியோ' சார்பில் நேற்று ஆசிரியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.ஆண்டிபட்டி ஒன்றியம், டி.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு நேற்று காலை மாணவர்கள் வழக்கம்போல் சென்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர்களும் தற்செயல் விடுப்பில் சென்றுவிட்டனர். இதுகுறித்து பெற்றோர்கள், மாணவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. நேற்று காலை மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் யாரும் வராததால் 200க்கும் மேற்பட்ட மாணவர்களை காலை உணவு, மற்றும் சத்துணவு பணியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை அறிந்த பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் 8 ஆசிரியர்களும் விடுப்பில் சென்றதால் பள்ளி செயல்படவில்லை.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் 393 ஆசிரியர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் நேற்று விடுப்பு எடுத்தனர். போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள் சிலர் மாற்றுப்பணிக்காக சில பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி