போடி சுப்புராஜ் நகரில் பூவரசு, வாகை, நாவல் மரங்கள், பசுமை தரும் வேம்பு, குளிர்ச்சி தரும் புங்கை என பல்வேறு மரங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி அத்தாலுகாவிலேயே அதிக ஆக்சிஜன் உள்ள இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள்நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இதனால் தங்களுக்கு துாயகாற்றை சுவாசிக்க முடிகிறது எனக்கூறும் இப்பகுதியில் வசிப்போர் மரக்கன்றுகள் வளர்ப்பு, சூழல் பாதுகாப்பு, பாலிதீன் ஒழிப்பு, மஞ்சள் பை பயன்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். மேலும் இவர்களின்இந்தநடவடிக்கைகளால் பிற பகுதி மக்கள், வளரிளம் பருவத்தினரிடையே இப்பகுதிமக்களுககு வரவேற்பு அதிகரித்துள்ளது. நிழல் தரும் மரங்கள்
அசோக்குமார், சுப்புராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், போடி: எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் மரங்கள், மாடித்தோட்டம் வளர்பதற்கான ஆசையை மக்களுக்கு 'தினமலர்' நாளிதழ் தூண்டி விடுகிறது. சுத்தமான காற்று,சுகாதாரமான உணவு, துர்நாற்றம் இல்லாத நீரோடைகள் இருந்தாலே நாம் நீண்ட நாட்கள்வாழ்வதற்கு வழிவகுக்கும். இயற்கை சுவாச காற்று தரக்கூடிய முதல் படியாக மரங்கள் இருந்தாலே நோய்களில் இருந்து தப்பித்து சுகாதாரமான வாழ்க்கையை வாழலாம்.போடி சுப்புராஜ் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் மூலம் சுப்புராஜ் நகர் முழுவதும் அதிக அளவில் ஆக்சிஜன் தரக்கூடிய பசுமை தரும் வேம்பு, குளிர்ச்சி தரும் புங்கை, பூவரசு, வாகை, நாவல், மலை வேம்பு, கொன்றை, ஆல மரங்கள் வளர்க்கப்பட்டதால் நிழல் தரும் வகையில் அமைந்துள்ளன.இயற்கையின் மீது கொண்ட ஆர்வத்தால் எங்கள் வீட்டில் வரவேற்பாளர்களே கனிகளின் அம்சம் கொண்ட பலா, மா, எலுமிச்சை, மாதுளை மரங்களையும், வெற்றிலை, கறிவேப்பிலை, பச்சிலை போன்ற மூலிகை செடிகளும் வளர்த்து வருகின்றோம். தினமும் தண்ணீர். ஊற்றி பராமரிப்பது மூலம் மனதும் லேசாகிறது. பூமியை நஞ்சாக்கும் பாலிதீன் பயன்பாட்டை அகற்றி மரங்கன்றுகள் வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்த நகராட்சி நிர்வாகம் முன் வந்தாலே மாசில்லா போடியாக உருவாக்க முடியும், என்றார். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம்
ரவீந்திரன், சமூக ஆர்வலர், போடி: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மனிதனுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரங்களை யாவது நட வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் மரங்களை வெட்டுவோர் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில் எனது வீட்டில் மூங்கில் மரங்களும், வீட்டின் முன்பாக ரோட்டின் இருபுறங்களிலும் வேம்பு, புங்கை மரங்கன்றுகள் நட்டு பராமரிப்பதால் மனதிற்கு சந்தோசம் கிடைக்கிறது.என்னைப் போல மற்றவர்களும் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்ததால், தற்போது சுப்புராஜ் நகர் முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கு சுத்தமான காற்று, அமைதியும் கிடைக்கிறது. அரசு இலவசங்களை வழங்குவதை விட நமக்கு உயிராக ஆக்சிஜன் தரக்கூடிய மரங்களுக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி செலுத்தும் வகையில் வீட்டிற்கு 2 மரம் வளர்ப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தி அவற்றை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.