| ADDED : மே 06, 2024 12:46 AM
தேனி : மாவட்டத்தில் மின்னல், இடியுடன் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் குளிர்ந்த நிலைக்கு மாறிய நிலையிலும், மழை பெய்யாத பெரியகுளம், தேனி பகுதிகள் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆண்டிபட்டி:கடந்த சில மாதங்களாக வாட்டி வதைக்கும் வெயிலால் ஆண்டிபட்டி பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்தது. மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து, குளம் கண்மாய்கள் வறண்டதால் கால்நடைகள் தீவனத்திற்கும், தண்ணீருக்கும் தவித்து வந்தன. இந்நிலையில் அக்னி வெயிலின் தாக்கமும் சேர்ந்ததால் இரவு பகல் எந்நேரமும் வெப்பம், புழுக்கத்தால் அனைவரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு வெயிலின் தாக்கம் குறைந்து திடீரென மேகம் திரண்டது. மின்னல் இடியுடன் துவங்கிய கோடை மழை ஒரு மணி நேரம் நீடித்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு பின் பெய்த மழையால் ஆண்டிபட்டியில் தணிந்துள்ள வெப்பம் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.கூடலுார்:2023 டிசம்பரில் பெய்த மழைக்குப் பின் கூடலுாரில் கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யவில்லை. கூடுதலான வெப்பத்தால் மானாவாரி விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை 4.00 மணிக்கு துவங்கிய கனமழை 4.45 மணி வரை நீடித்தது. இதனால் குளிர்ச்சி அடைந்ததுடன் மானாவாரி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.கம்பம்: கம்பம், உத்தமபாளையத்தில் மின்னல், இடியுடன் மழை பெய்தது. இதனால் பொது மக்கள், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதே நேரத்தில் பெரியகுளம், தேனியில் மழை பெய்யாத நிலையில் வானம் இருண்ட நிலையில் குளிர்ந்த காற்று வீசியதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.