சூப்பர் ரிப்போர்ட்டர்.... பாசன வாய்க்காலில் குப்பை கொட்டி கழிவுநீர் ஓடையாக மாறிய அவலம் பாசன வாய்க்காலில் குப்பை கொட்டி கழிவுநீர் ஓடையாக மாறிய அவலம் சின்னமனுார் நகராட்சி சுகாதார சீர்கேட்டில் தவிப்பு
சின்னமனுார், : சின்னமனுாரில் செல்லும் பி.டி.ஆர்., பாசன வாய்க்காலில் குப்பை கொட்டுவதால் கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது. நீர் நிலை மாசுபடுவதை தவிர்க்க அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நகரின் விரிவாக்க பகுதிகளில் குப்பை அகற்றும் பணியில் பெரும் தொய்வு காணப்படுகிறது. இதனால் விரிவாக்க பகுதிகளில் வசிப்போர் குப்பையை காலனி நுழைவு வாயிலில் கொட்டுகின்றனர். சிவசக்தி நகரில் குடிநீர் இணைப்பு,சாக்கடை வசதி, தெரு விளக்குகள் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் இரவில் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.நகரின் முக்கிய வீதிகள், தேரோடும் வீதிகளான வடக்கு, தெற்கு, நடுத்தெரு வீதிகள் குண்டும் குழியுமாக உள்ளது.சாமிகுளம் குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்லும் பி.டி.ஆர்., பாசன வாய்க்கால், கழிவு நீர் ஓடையாக மாறி உள்ளது. கருங்கட்டான்குளத்தில் கட்டப்பட்ட நல்வாழ்வு மைய கட்டடம், காலை உணவு திட்டத்திற்காக கட்டப்பட்ட சமுதாய சமையலறை, கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் புனரமைக்கப்பட்ட கணினி வரி வசூல் மைய கட்டடம் என பல கட்டடங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய கட்டப்பட்ட நுண் உரக்கூடங்கள் பெயரளவில் செயல்படுகிறது. சீப்பாலக்கோட்டை ரோட்டில் எரசக்கநாயக்கனுார் ரோடு பிரியும் இடத்தில் சாக்கடை அடைப்பை சரி செய்ய உடைக்கப்பட்ட நடைபாதை பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது. உழவர் சந்தை அருகில் உள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, வடக்கு ரத வீதி, வ.உ.சி. வீதிகள், கருங்கட்டான்குளம் உள்ளிட்ட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து மக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. பாதாள சாக்கடை பராமரிக்க வேண்டும்
சிவாஜி, சமூக ஆர்வலர், சின்னமனுார் : நகரில் வீடு, வீடாக குப்பைசேகரிக்கும் பணிமந்தமாக உள்ளது. தெருக்களில் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளம் முறையாக மூடாததால் குண்டும், குழியுமாக உள்ளது. அம்ரூத் திட்டத்தில் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்பதை நிறைவேற்ற வேண்டும். நகராட்சி பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும் பாதை விலக்கில் சாலை ஓரத்தில் பெரிய பள்ளம் தோண்டி பல மாதங்களாக மூடாமல் வைத்திருப்பது விபத்துக்கள் ஏற்பட வழி வகை செய்வது போல உள்ளது. பாதாள சாக்கடை பராமரிப்பு செய்ய வேண்டும். கால்வாயில் கொட்டப்படும் குப்பை
ரவி, விவசாயி, சின்ன மனுார்: விரிவாக்க பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லை. வரி வசூல் செய்யும் நகராட்சி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அழகர்சாமி நகர், கோகுலம் காலனி, திருநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தெரு விளக்குகள், சாலை வசதி இல்லை. விஸ்வக் குளம் சங்கிலித்தேவன் குளங்களை பராமரிப்பு செய்தது வரவேற்க தக்கது. பாதுகாப்பிற்கு காவலர் நியமிக்க வேண்டும்.பி.டி.ஆர். கால்வாய் தூர் வார வேண்டும். கால்வாயில் குப்பைகளை கொட்டாமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.