வாடகை வாகன டிரைவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்
மூணாறு: மூணாறில் அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் ஆகியோரின் ஆதரவு இன்றி வாடகை வாகன டிரைவர்கள் இன்று (பிப்.10ல்) வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.மூணாறில் ஆன்லைன் டாக்சி, வாடகை டூவீலர், அரசு சுற்றுலா பஸ், ஆகியவற்றால் கார், ஜீப், ஆட்டோ உள்பட வாடகை வாகனங்கள் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கருதி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று (பிப்.10ல்) கார், ஜீப், ஆட்டோ ஆகியவற்றை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.போராட்டத்தில் ஈடுபடும் டிரைவர்கள் எவ்வித கட்சி, அமைப்பு ஆகியவற்றை சார்ந்தவர்கள் இல்லை என்பதால், போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அனைத்து கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என முடிவு செய்தனர். அதேபோல் வர்த்தக சங்கத்தின் நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டத்திலும் கடைகளை வழக்கம் போல் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதனால் அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கம் ஆகியோரின் ஆதரவு இன்றி போராட்டம் நடக்க உள்ளது.