மலைவாழ் மக்கள் பட்டா வழங்க கோரி அரசு பஸ் சிறை பிடிப்பு
பெரியகுளம் : சோத்துப்பாறை அணை பகுதியில் மலைக்கிராம மக்கள் பட்டா வழங்க கோரி 2 மணி நேரம் அரசு பஸ்சினை சிறைபிடித்தனர்.பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு மேற்பகுதியில் போடி ஒன்றியம் அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சில் அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சொக்கன் அலை, அண்ணாநகர், உட்பட 10 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் பல ஆண்டுகாலம் விவசாயம் செய்து வாழ்கின்றனர்.இந்நிலையில் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டா நிலங்கள் இருந்தால் மட்டுமே வசிக்க முடியும். இல்லாதவர்கள் மலையைவிட்டு வெளியேறுமாறு வனத்துறையினர் ஒரு மாதத்திற்கு முன்பு 300 க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால் நேற்று மலை விவசாய சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் முருகேசன், விவசாய சங்க மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேல் உட்பட மலை கிராம மக்கள் சோத்துப்பாறை அணை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு சோத்துப்பாறைக்கு காலை 9:00 மணிக்கு வந்த அரசு பஸ்சினை சிறைபிடித்தனர். பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு, இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த், ரேஞ்சர் ஆதிரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பஸ் விடுவிக்கப்பட்டது.கிராமமக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக மலைப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். நில நிர்வாக ஆணையத்தின் மூலம் அளவீடு செய்யப்பட்டதில் சிலருக்கு மட்டும் பட்டா கொடுத்துவிட்டனர். முந்தைய கலெக்டர் சுனில் பாலிவால் மலைப்பகுதியில் மீண்டும் சர்வே செய்து பட்டா கிடைக்காதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனையும் இதுவரை அமுல்படுத்தவில்லை என்றனர்.