| ADDED : ஜூலை 10, 2024 11:49 PM
தேவதானப்பட்டி:போலீசாரிடம் டூவீலரை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே டி..காமக்காபட்டியில் சோதனை சாவடியில் தேனி, திண்டுக்கல் மாவட்ட போலீசார் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஜூலை 2 அதிகாலை போலீஸ்காரர் நரேந்திரசிங் 41, செல்வராஜா, கார்த்திக் ஆகியோர் டூவீலர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டூவீலரில் வந்தவர் சோதனை சாவடியில் நிற்காமல் கொடைக்கானல் ரோட்டில் வேகமாக சென்றார். அவரை பிடிக்க நரேந்திரசிங் சோதனைக்காக நிறுத்தியிருந்த மதுரை காளிதாஸ் என்பவரின் டூவீலரை எடுத்துச் சென்று மர்மநபரை விரட்டி பிடித்தார். அவர் நரேந்திர சிங்கை கீழே தள்ளி அவர் ஓட்டி வந்த டூவீலரை பறித்து தப்பினார். மர்மநபர் முதலில் ஓட்டிச் சென்ற டூவீலர் திண்டுக்கல் மாவட்டம்,அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் திருடு போனது என விசாரணையில் தெரியவந்தது. சோதனை சாவடியில் போலீசாரிடமே டூவீலரை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மர்மநபரை பிடிக்க தேவதானப்பட்டி எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் மர்மநபர் நேற்று மதுரை அசோக்நகர், நாராயணகுரு மஹால் ரோட்டை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பொன் செல்வேந்திரன் 21 என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.