| ADDED : மே 04, 2024 05:57 AM
தேனி: தேனியில் மீறு சமுத்திர கண்மாய் கரையில் கட்டட கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுத்து கண்மாய் கரையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனி தாலுகா அலுவலகம் அருகே நீர் வள ஆதார அமைப்பிற்கு சொந்தமான 120 ஏக்கர் பரப்பளவில் மீறு சமுத்திர கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயிக்கு வீரப்பஅய்யனார் கோயில் மலை பகுதியில் உள்ள ஓடைகள் மூலம் நீர்வரத்து உள்ளது. மழைகாலங்களில் கண்மாய் நிறைந்து மறுகால் நீர் கொட்டக்குடி ஆற்றில் கலக்கிறது. நகரின் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த கண்மாய் கரை வழியாக டூவீலர்கள், ஆட்டோக்கள் பைப்பாஸ் செல்கின்றன.இந்த கண்மாய் கரைகளில் படகு சவாரி, நடைபயிற்சி வசதி, உடற்பயிற்சி கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பின் கைவிடப்பட்டன. தற்போது கண்மாய் வழியா பைபாஸ் ரோடு செல்லும் கரை பகுதியில் கட்டட கழிவுகள், குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கரை சேதமடைவதுடன், பொதுமக்கள் அப்பாதையை பயன்படுத்துவதிலும் சிரமம் நிலவுகிறது. கட்டட கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரையில் கொட்டிய கழிவுகள், குப்பைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.