மேலும் செய்திகள்
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
03-Oct-2025
போலீஸ் செய்திகள்.....
03-Oct-2025
நாளை( அக்.,4) மின்தடை
03-Oct-2025
ரத்ததான முகாம்
03-Oct-2025
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
02-Oct-2025
பெரியகுளம் : பெரியகுளம் ஒன்றியம், கீழவடகரை ஊராட்சியின் உட்கடை கிராமமான செல்லா காலனியில் பழங்குடியின மக்கள் மின் வசதி இன்றி இருளில் தவித்தும், மண் சுவற்றில் ஆன வீடுகளின் மேற்கூரை சேதமடைந்து மழை, வெயிலால் தவித்து வருகின்றனர். இவ் ஊராட்சியில் அழகர்சாமிபுரம், பெருமாள்புரம், தெய்வேந்திரபுரம், ஸ்டேட்பேங்க் காலனி, செல்லா காலனி, வைத்தியநாதபுரம் உட்பட 5 உட்கடை கிராமங்களுக்கு உட்பட்ட 12 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி பேரூராட்சிக்கு நிகராக அதிக மக்கள் தொகை கொண்டுள்ளது. சோத்துப்பாறை அணை ஊராட்சிக்கு மிக அருகாமையில் இருந்தும் அணையின் கூட்டுக் குடிநீர் திட்டம் கீழ வடகரை ஊராட்சிக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்தில் தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் குழாய்கள் வரும் வழியில் ஆங்காங்கே உடைந்து குடிநீர் வீணாகி, அழகர்சாமிபுரம் மேல்நிலைத் தொட்டிக்கு 40 ஆயிரம் லிட்டர் வந்து சேருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டில் ஊராட்சி தவிக்கிறது. இந்தப்பகுதி மக்கள் குடிநீரை ஒரு கிலோ மீட்டர் தூரம் பெரியகுளம் நகராட்சி பொதுக்குழாயில் குடிநீர் எடுத்து செல்லும் அவலம் தொடர்கிறது. ஏராளமானோர் சைக்கிள், டூவீலரில் குடிநீர் எடுத்துச் செல்பவர்கள் ஒருபுறமும், தலைச் சுமையாக பெண்கள் குடிநீர் குடத்தை சுமந்து சிரமம் அடைகின்றனர். ஊராட்சியில் பல இடங்களில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் பல ஊர்களில் குடிநீர் ஆதாரமாக திகழும் வராகநதியில் அழகர்சாமிபுரத்தின் கழிவு நீர் கலக்கிறது. இதனால் வராகநதி 'கூவமாக' மாற்ற இந்த ஊராட்சி முதன்மையாக திகழ்கிறது. வராகநதி கழிவுநீரில் ஏராளமான பன்றிகள் உலா வருகிறது. இருண்ட கிராமம்
பாண்டிச்செல்வி, கல்லூரி மாணவி, செல்லா காலனி: கீழ வடகரை ஊராட்சி 6 வது வார்டு செல்லா காலனியில் பத்தாண்டுகளுக்கும் மேலாக 54 குடும்பங்களில் நுாற்றுக்கும் அதிகமானோர் வசித்து வருகிறோம். தென்னக்கீற்றும், தகரம், கம்பு, சாக்கு இவைகளை வைத்து குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். சேமதடைந்த குடிசை வீடுகளின் மேற்கூரை வழியாக மழை நீர் வீட்டிற்குள் ஒழுகும் போது இரவு முழுவதும் துாங்காமல் தவிக்கின்றோம். இக் கிராமத்தில் மின்சாரம் இல்லை. சோலார் விளக்கும் ஒரு மணி நேரம் மட்டுமே எரியும். மழை காலத்தில் சோலார் விளக்கும் எரிவது இல்லை. இருளில் விஷ பூச்சிகளுக்கு பயந்து தூக்கத்தை தொலைத்து வாழ்கிறோம். இங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் ரேஷன் கடை உள்ளது. அரிசியும், பருப்பு மட்டுமே தருகின்றனர். மண்ணெண்ணெய் தருவதில்லை. இதனால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கூட எங்களால் படிக்க வசதியில்லாமல் உள்ளோம். இதனால் பல மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. பட்டா இங்கே இடம் எங்கே
சுப்பிரமணியன், பழங்குடியினர், செல்லா காலனி: ஆறு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி 54 பேருக்கு கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட கரடி பொட்டல் பகுதியில் இலவச பட்டா வழங்கினார். வீடு கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை வருவாய்த்துறையினர் எங்களுக்கு கொடுத்த பட்டா அடிப்படையில் சர்வே செய்து இடத்தை வழங்க வில்லை. வாழ்வாதாரம் 'பாழ்பட்டு' உள்ளது. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் எங்களுக்கு ரேஷன் பொருட்கள் 5 கி.மீ., துாரமுள்ள அழகர்சாமிபுரம் ரேஷன் கடைக்கு சென்று பெற வேண்டும். பணியாளர்களின் குளறுபடியால் உணவு பொருட்கள் கிடைப்பது இல்லை. இதனால் சில நாட்கள் 'பட்டினியாக' உள்ளோம். எங்கள் பகுதியில் ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்க மாவட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு
அருள்மேரி, அழகர்சாமிபுரம்: குடிதண்ணீருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று தலைச் சுமையாக தூக்கி வருகிறேன். பலமுறை கிராமசபை கூட்டங்களில் சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த மக்கள் தெரிவித்து விட்டனர். இதுவரை நடவடிக்கை இல்லை. இங்குள்ள பெண்கள் சுகாதார வளாகம் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படுகிறது. சுகாதார வளாகத்தில் தூய்மைப்படுத்தி, கோப்பைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தினமும் பகல் முழுவதும் திறக்க வேண்டும். ரூ.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
எஸ்.செல்வராணி, ஊராட்சி தலைவர்: கீழவரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனி நுழைவு முதல் பெருமாள்புரம் வரை 700 மீட்டர் நீளத்திற்கு ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைக்கப்பட்டது. தெய்வேந்திரபுரத்தில் பெண்களுக்கும், பெருமாள்புரத்தில் ஆண்களுக்கும், கும்பக்கரை அருவி வளாகத்தில் பொதுச் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அழகர்சாமிபுரத்தில் துணை சுகாதார நிலையம் உட்பட ரூ.5 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
02-Oct-2025