| ADDED : ஜூலை 04, 2024 02:28 AM
ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நேற்று காலை 9:30 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் போக பாசனப்பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கன அடி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கலெக்டர்கள் ஷஜீவனா(தேனி), பூங்கொடி (திண்டுக்கல்), சங்கீதா (மதுரை), எம்.எல்.ஏ.,சரவணக்குமார், நீர்வளத்துறை மதுரை செயற்பொறியாளர் அன்புச்செல்வம், வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் அணையின் கீழ் பகுதியில் உள்ள மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும் அதிக மகசூல் பெற நீர் வளத்துறையினருடன் ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நீர் திறப்பால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16,452 ஏக்கர், மதுரை வடக்கு தாலுகாவில் 26,792 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். நேற்று காலை அணை நீர்மட்டம் 51.71 அடியாகவும் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 706 கனஅடியாகவும் இருந்தது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.