உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அதிக இனிப்பு பன்னீர் திராட்சை புதிய ரகம் அறிமுகம் எப்போது : கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு

அதிக இனிப்பு பன்னீர் திராட்சை புதிய ரகம் அறிமுகம் எப்போது : கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு

கம்பம்: பன்னீர் திராட்சையில் மேம்படுத்தப்பட்ட புதிய ரகம் அறிமுகம் செய்வது எப்போது என திராட்சை விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கு ஆண்டு முழுவதும் திராட்சை விளையும் பகுதி என பெருமை பெற்றுள்ளது. காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. ஒடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சையை கைவிட்டு மீண்டும் பன்னீர் திராட்சை சாகுபடிக்கு விவசாயிகள் திரும்பி வருகின்றனர். பன்னீர் திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல், இனிப்பு தன்மை குறைவாக இருப்பது பிரச்னையாக உள்ளது.இப் பிரச்னையை தவிர்க்க ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை வேளாண் பல்கலை இணைந்து பன்னீர் திராட்சையில் மேம்படுத்தப்பட்ட ரகம் 2 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தனர்.பன்னீர் திராட்சையில் மட்டும் 14 ரகங்களில் 5 வது ரகத்தை ஆராய்ச்சி செய்து, புதிய மேம்படுத்தப்பட்ட ரகம் கண்டுபிடிக்கப்பட்டது.தேனி திராட்சை கலெக்சன் 126 ( Theni Grapes collection 126 ) சுருக்கமாக டிஜிசி 126 என்று பெயரிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள ரகத்தில் கோடை காலத்தில் கவாத்து அடித்தால் மகசூல் குறையும். அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய ரகத்தில் மகசூல் குறையாது. பனி காலத்தில் கவாத்து அடித்து கோடையில் அறுவடை செய்தால் இனிப்பு தன்மை 22 முதல் 26 பிரிக்ஸ் வரை கிடைக்கும். ஆனால் தற்போதுள்ள ரகத்தில் இனிப்பு தன்மை 18 முதல் 20 பிரிக்ஸ் மட்டுமே உள்ளது. அத்தோடு ஆண்டு முழுவதும் ஒரே சீரான மகசூல் கிடைக்கும். செவட்டை நோயை ஓரளவிற்கு தாங்கி நிற்க கூடியது . இந்த புதிய ரகம் வெளியிடுவது தொடர்பான முடிவை கோவை வேளாண் பல்கலைக்கழகம் விரைவில் அறிவிக்கும் என்று கூறி ஒராண்டை கடந்து விட்டது. இதுவரை அந்த புதிய ரகம் அறிமுகம் செய்யவில்லை. - புதிய ரகத்தை விரைந்து அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராட்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ