| ADDED : ஜூன் 28, 2024 01:18 AM
மூணாறு : மூணாறைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமாக தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் வனவிலங்குகள் நடமாட்டம், மழை ஆகியவற்றால் ஆண்டு முழுவதும் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு உள்பட வன விலங்குகளின் நடமாட்டத்தால் நிம்மதி இழந்துள்ள தொழிலாளர்கள் சமீபகாலமாக மழை என்றால் அஞ்சி நடுங்குகின்றனர். 2018ல் மழை ஏற்படுத்திய பேரழிவுகளை நேரில் கண்ட தொழிலாளர்கள் 2020 ஆக.6ல் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் உள்பட 70 பேர் பலியான சம்பவத்தின் வடுக்கள் மனதை விட்டு அகலவில்லை. அதனால் மழை துவங்கியதும் ஒரு வித அச்சத்தில் துவண்டு விடுகின்றனர்.தவிர ஜன.23, பிப்.26 ஆகிய நாட்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் இருவரை கொன்றதால் வனவிலங்குகள் நடமாட்டம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.இதனிடையே மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை கடந்த இரண்டு நாட்களாக மூணாறு அருகே செண்டு வாரை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டதால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.