உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசுப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு ஆதார் பதிவு செய்ய ஏற்பாடு

அரசுப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு ஆதார் பதிவு செய்ய ஏற்பாடு

தேனி: மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆதார் இல்லாத 10 ஆயிரம் மாணவர்களுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள் 325, நடுநிலைப் பள்ளிகள் 99, உயர்நிலைப் பள்ளிகள் 36, மேல்நிலைப் பள்ளிகள் 70 என அரசுப்பள்ளிகள் மட்டும் 530 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அனைத்துப் பள்ளிகளிலும் எமிஸ் தளம் மூலம் மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்யப்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த ஆய்வில் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக ஆண்டிப்பட்டி 775, போடி 1046, கம்பம் 2500, பெரியகுளம் 1930, சின்னமனுார் 843, உத்தமபாளையம் 539, மயிலாடும்பாறை 591, தேனி 1974 என மொத்தம் 10,198 மாணவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாதது கண்டறியப்பட்டு உள்ளது. இம்மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை (பிப்.,23) முதல் புதிய ஆதார் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆதார் பதிவு துவங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யப்படுகிறது. ஒரு மாதத்தில் 10 ஆயிரம் மாணவர்களுக்கும் ஆதார் பதிவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ