பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
தேனி: பாரத எழுத்தறிவு திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்விப் பயிற்சி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகள், மாவட்ட சிறை என 651 இடங்களில் 10,472 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு நேற்று மதிப்பீட்டுத் தேர்வு நடந்தது. தேர்வினை பயிற்சி பெற்ற அனைவரும் எழுதினர். தேவதானப்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட மையங்களில் நடந்த தேர்வினை பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி இயக்க இயக்குனர் நாகராஜமுருகன் பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் மோகன், திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.